‘கருப்பு’ வெளியீடு எப்போது? - இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பதில்

‘கருப்பு’ வெளியீடு எப்போது? - இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பதில்

‘கருப்பு’ வெளியீட்டில் தாமதம் ஏன், எப்போது வெளியீடு உள்ளிட்ட கேள்விகளுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. தற்போது தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்ட ஆர்.ஜே.பாலாஜி, ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார்.

‘கருப்பு’ தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி, “’கருப்பு’ படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால், சரியான நேரத்தில் வெளியிட முடியவில்லை. ‘கருப்பு’ படம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

எனது தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவருமே சமீபத்தில் படத்தைப் பார்த்தார்கள். அவர்களுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இந்த தீபாவளிக்கு முதல் பாடல் வெளியாகும். சூர்யா சார் தனது நடனத்தால் அசரடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி, ஷிவதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.