விக் இல்லைனா நம்ம பொழப்பு என்னாகும்.. சத்யராஜை லாக் செய்த கவுண்டமணி.. எதையும் விட்டுவைக்கல
நடிகர் கவுண்டமணி கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். பல வருடங்கள் கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தில் இருந்த அவருக்கு ஒருகட்டத்தில் மார்க்கெட் சரிந்தது. புது படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், அவர் நடித்த பழைய படங்களின் நகைச்சுவை காட்சிகள் டிவி சேனல்களில் தவறாமல் ஓடுகின்றன. ஸ்மார்ட் ஃபோன்களில் ஏகப்பட்ட மீம்ஸ்களுக்கும் அவரது காமெடிகள் உதவிக்கொண்டிருக்கின்றன.
நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டிருந்தவர் கவுண்டமணி. பாக்யராஜ் மூலமாக பாரதிராஜாவின் அறிமுகம் கிடைக்க 16 வயதினிலே திரைப்படம் அவருக்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. ஒவ்வொரு வாய்ப்பையும் முதல் வாய்ப்பாக கருதிய அவர்; தனது வேரியேஷன் காமெடிகளை கொடுத்தார். போதாக்குறைக்கு அவருக்கு துணையாக செந்திலும் சேர்ந்துகொண்டார்.
அசைக்க முடியாத காம்போ: இரண்டு பேரும் சேர்ந்ததை அடுத்து கோலிவுட்டின் நகைச்சுவை அடுத்தக்கட்டத்துக்கு போனது என்றே சொல்ல வேண்டும். செந்தில் கேட்கும் கேள்விகளும், அதற்கு கவுண்டமணி கொடுக்கும் ரியாக்ஷன்களும் பதில்களும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டது. டாம்&ஜெர்ரி மாதிரி அவர்கள் திரையில் தோன்றியபோதெல்லாம் மக்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக யாராலும் அசைக்க முடியாத இடத்தில் பல வருடங்கள் இருந்தார்கள் அவர்கள்.
சரிந்த மார்க்கெட்: அனைத்து உச்ச நட்சத்திரங்களுக்கும் ஒரு காலாவதி தேதி உண்டு என்பதுபடி கவுண்டமணிக்கும் வந்தது. தனக்கான காலம் திரையில் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்ட அவர்; டீசன்ட்டாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கிவிட்டார். அப்படி ஒதுங்கியவர் முழுக்க முழுக்க குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார். இடையில் ஒத்த ஓட்டு முத்தையா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் பழையபடி சென்சேஷனல் ஆகவில்லை.
மாறாத பழக்கம்: இடையே மனைவியும் உயிரிழந்துவிட்டார். மனைவியை பிரிந்து வீட்டில் இருக்கும் அவர்; தன்னுடன் பணியாற்றியவர்கள் மறைந்தாலோ, சினிமாவில் முக்கியஸ்தர்கள் இறந்தார்களோ இந்த வயதிலும் மாலையும் கையுமாக துக்கம் விசாரிக்க ஆஜராகிவிடுகிறார். அதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். இள வயது நடிகர்களே பாதி துக்கத்துக்கு வர யோசிக்கும் நிலைமை இருக்கையில்; இவ்வளவு புகழை சம்பாதித்த பிறகும் பழையதை மறக்காமல் வருகிறாரே என அவரை பாரட்டிவருகிறார்கள்.
சத்யராஜ் பேசியது: இந்நிலையில் கவுண்டமணியுடன் கடந்த பல வருடங்களாக நெருக்கமான நட்பில் இருக்கும் சத்யராஜ் இன்று வா வாத்தியார் பட விழாவில் அவர் பற்றி பேசினார். அவர் பேசுகையில், "நானும் கவுண்டமணி அண்ணனும்கூட விக் தொடர்பாக விளையாட்டுக்கு பேசிக்கொள்வோம். அவர் என்னிடம் ஒருமுறை, 'ஏன் சத்யராஜ் இந்த விக் இல்லைனா நம்ம பொழப்பு என்னாகும்' என கேட்டார். அதற்கு நானோ மாடு மேய்க்கத்தான் போயிருப்போம் என்றேன். அதற்கு அவரோ, 'மாடு மேய்க்கவும் ஒன்னு, ரெண்டு சரியா தெரிஞ்சிருக்கணுமே. அதுவும் நமக்கு தெரியாது' என கூறினார்" என்றார்.