''தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026'' - பிப்ரவரி 20 ஆம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை?
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 வரும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் இப்போதே களத்தில் முழுவீச்சில் இறங்கி விட்டன. இதனால் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக என்று நான்குமுனை போட்டியாக இருக்க போகிறது.
அதிமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தை கணக்கை துவக்கி தீவிரமாக சென்றுக் கொண்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, ஐஜேகே, தமாகா, அமமுக, புதிய நீதி கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என, இதுவரை 8 கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன.
மறுபுறம் பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு, வேட்பாளர் நேர்காணல், சட்டமன்ற தொகுதி வாரியாக வெற்றி பெற ஆய்வு கூட்டம் என அரசியல் கட்சிகள் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. தவெக முதல்முறையாக களம் காண இருக்கும் நிலையிலும் மற்ற கட்சிகளுக்கு நிகராக பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
அதே போன்று திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்த முறையும் திமுக கூட்டணியில் தொடருவோம் என்று அறிவித்துள்ளன. மேலும், இந்த முறை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்த சூழலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி 5 ம் தேதி பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சட்டப் பேரவைக்கு மே மாதம் வரை மட்டுமே அவகாசம் இருப்பதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதே சமயம் தாக்கல் செய்யப்பட உள்ளது திமுக அரசின் இறுதி பட்ஜெட் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பலதரப்பு மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட நடுத்தர மக்களை ஆகியோரை கவரும் விதமாக முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.