'இயக்குநர் சிகரம்' கண்டெடுத்த இமயம்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று

'இயக்குநர் சிகரம்' கண்டெடுத்த இமயம்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று

தமிழ் சினிமாவின் கடந்த காலகட்டத்தில் கதாநாயகன் என்றால் சிகப்பான தோற்றம், கலையாத முடி, எந்தப் புரத்திலிருந்து பார்த்தாலும் புஜபல பராக்கிரமசாலி போல காட்சியளிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இந்த நிலையை, சுக்குநூறாக நொறுக்கி தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்தவர் ரஜினிகாந்த். 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பெங்களூருவில் பிறந்த ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இவரே தற்போது ரஜினியாக அறியப்படுகிறார். சினிமா மீது இவர் கொண்ட தீரா காதலால் சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

அப்போது இவரைப் பார்த்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ரஜினியின் கண்களில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கிறது என்பதை உணர்ந்து 1975 ஆம் ஆண்டு தான் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே வில்லன் வேடம், அதிலும் ரஜினியின் ஆரம்ப காட்சியானது கதவுகளைத் திறந்து உள்ளே வருவது போல படமாக்கப்பட்டிருக்கும். குறிப்பாக தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதாநாயகன் உள்ளே வருகிறான் என்பதை சூசகமாக சொல்லும் விதமாக அந்த காட்சி இடம் பெற்றிருந்தது. முதல் படத்திலேயே தான் யார் என்கின்ற தனி முத்திரை பதித்தார் ரஜினிகாந்த்.

ஆரம்ப காலகட்டத்தில் 16 வயதினிலே, மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி ஆகிய திரைப்படங்களில் பக்கா வில்லனாக நடித்தார்.

அந்த வகையில், காலங்கள் உருண்டோடின. கதாநாயகன் ஆக ரஜினிகாந்த் மாறும் காலம் அவருக்கு கணிந்தது. 1978 ஆம் ஆண்டு பைரவி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். கறுப்பான உருவம், பரட்டை தலை, சிகரெட்டை ஸ்டைலாக பிடிப்பது, எதையும் வேகமாக செய்யும் சுறுசுறுப்பு இவை அனைத்தும் மக்களை கவர்ந்தது. அன்று முதல் இன்று வரை பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகனாக தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் இருந்து வருகிறார்.

ரஜினிகாந்த் எப்போதும் தனக்குள் சொல்லிக் கொள்வது, ''நடிகன் நாயகனாவது வெகு சுலபம். இருப்பினும் தன்னை நம்பி திரையரங்குகளில் குவியும் ரசிகனைத் தான் முழு திருப்திப்படுத்தி அனுப்ப வேண்டும். அப்போதுதான் அவன் நம்மை ஏற்றுக்கொள்வான்.'' என்பதை பலமுறை அவரே தெரிவித்திருக்கிறார்.

தளபதி, தர்மதுரை, பாண்டியன், மன்னன், எஜமான், பாட்ஷா, அண்ணாமலை, அருணாசலம், படையப்பா, முத்து என்று தொடர் வெற்றிகளைக் அசாத்தியமாக பெற்றார். இவை அனைத்திற்கும் அவரது கடினமான உழைப்பே மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.

தொடர்ச்சியாக 2000-க்கு பிந்தைய ஆண்டுகளில் சந்திரமுகி, எந்திரன், சிவாஜி, எந்திரன், ஜெயிலர், கூலி என இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கும் காந்தவிசை தன்னுள் எப்பொழுதும் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து காட்டினார். ஒரு குடும்பத்தில் தாத்தா முதல் பேரன் வரை மூன்று தலைமுறை ரசிகர்களை கொண்டிருக்கக் கூடிய அற்புத வித்தைக்காரர் தான் ரஜினிகாந்த்.

நகைச்சுவை, காதல், சண்டை என எல்லா ஏரியாவிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி சிவாஜி, எந்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வியாபார எல்லையையும் விரிவுபடுத்தினார். இவரது படம் தான் முதன்முதலில் 100 கோடி ரூபாய் வசூலித்த தமிழ் படம் என்ற அசாதாரண சாதனையை படைத்தது. அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 இன்று வரை 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. அதே போல கூலி திரைப்படமானது 400 கோடி ரூபாய்க்கு மேலே வசூல் சாதனை படைத்தது. ரஜினியின் படங்களுக்கு இங்கு மட்டுமின்றி ஜப்பான் போன்ற உலக நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரஜினியின் முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் தாக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், இப்போது ஜப்பானிற்கு சென்று இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று சொன்னால் ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்? என ஜப்பான் மக்கள் ரஜினிகாந்த் மீது அக்கறையுடன் விசாரிப்பார்கள். அந்த அளவிற்கு ரஜினியின் செல்வாக்கு நாடு கடந்து விரிவடைந்திருக்கிறது.

கோப்புப்படம்

அந்த வகையில் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படமானது நெல்சன் இயக்கத்தில் வருகிற 2026 ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் கமல்ஹாசன் தயாரிக்கப் போகும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொடுக்கவும் இருக்கிறார். இவை இரண்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், ரஜினியின் பிறந்தநாளான இன்று (டிச.12) கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் 4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்ய இருக்கிறது. 25 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படம் இன்றைய இளசுகளுக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் எத்தனை உச்ச நடிகர்களின் கொடிகள் பறந்தாலும், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான் என சொல்வதில் மிகை இல்லை.