’லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ - திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வெற்றிமாறன்

’லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ - திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வெற்றிமாறன்

 ’லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

’லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ இந்த பெயர் கடந்த காலங்களில் செய்திகளை உற்று நோக்கி வந்தவர்களுக்கு பரிச்சயமான பெயராகும். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் கதையில், பிரபல நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், லோகா கண்ணன், நர்மதா, கவிதா பாரதி, கனியா பாரதி, அருவி மதன், சுபா. வீரபாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் பெரியாரிய ஆதரவாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, கதைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது என நடிகர்கள் குழு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இப்படத்தை சமூக கதைகள் உருவாக்குவதில் தேர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்றால் என்ன?

1940ஆம் ஆண்டு லட்சுமிகாந்தன் அன்றைய மதராஸ் மாகாணத்தில் ’சினிமா தூது’ என்ற பத்திரிகை தொடங்கி சினிமா பிரபலங்கள் குறித்த ரகசியங்களை எழுதி வந்தார். அப்போது காகித தட்டுப்பாட்டால் பல்வேறு பத்திரிகைக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், லட்சுமிகாந்தன் அனுமதி பெறாமல் பத்திரிகை நடத்தி வந்தார். சினிமா பிரபலங்களின் ரகசியங்களை எழுதியதால் இவரது பத்திரிகை அன்றைய காலகட்டத்தில் முடக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருந்த ‘இந்து நேசன்’ என்ற பத்திரிகையை வாங்கி, அதன்மூலம் மேலும் அதிகமாக திரைத்துறை சேர்ந்த பிரபலங்கள் குறித்த ரகசியங்களை எழுதத் தொடங்கினார்.

இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்து லட்சுமிகாந்தனுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவர் 1944ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் பிரபல நடிகர் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து விசாரணையின் முடிவில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு தவிர தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மதராஸ் நீதிமன்றம் மறு விசாரணையின் மூலம் 1947ஆம் ஆண்டு தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை விடுதலை செய்தது. விடுதலைக்கு பிறகு தியாகராஜ பாகவதர் திரையுலகில் பெரியளவில் சோபிக்காமல் விலகினார்.