'மன நிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது' - அறிவு திருவிழா புத்தகக் காட்சி குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற புத்தகக் காட்சியை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கினார்.
திமுக இளைஞரணி சார்பில் திமுக 75 முப்பெரும் அறிவுத் திருவிழா இந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியான முற்போக்கு புத்தகக் காட்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 8ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், திமுக 75 வரலாற்றுக் கண்காட்சி மற்றும் தன்மானம் காக்கும் கழகம் மேடை நாடகம் போன்றவற்றை பார்வையிட்டார். பின்னர், ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற கருத்தரங்கத்தினை தொடங்கி வைத்ததுடன், ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலினையும் வெளியிட்டார்.
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழ்த்தேசியம், பெண்ணியம் போன்ற முற்போக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் 46 பதிப்பங்களின் சார்பில் 58 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. முற்போக்கு புத்தகக் காட்சியை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு, பல்வேறு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் கடைசி நாளான (நவ.16) இன்று, மீண்டும் அங்கு சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புத்தகக் காட்சியை சுமார் இரண்டரை மணிநேரம் பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்த மாணவர்கள், புத்தக பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும் ஒவ்வொரு அரங்கமாக நேரில் சென்று பார்வையிட்ட அவர், தனக்கு பிடித்த 63 புத்தகங்களை தேர்வு செய்து வாங்கினார்.
குறிப்பாக, திராவிட இயக்க புத்தகங்கள், வரலாறு புத்தகங்கள், இலக்கிய புத்தகங்கள், சுயசரிதை புத்தகங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்களை படித்துப் பார்த்து வாங்கினார். இந்த மாபெரும் அறிவு திருவிழாவை வெற்றிகரமாக நடத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவர் பாராட்டினார்.
முற்போக்கு புத்தகக் காட்சியை பார்வையிட்ட அனுபவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “திமுக 75 அறிவுத் திருவிழா முற்போக்கு புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்! வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மன நிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.
குறிப்பாக, Carry on, but remember எனும் பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன். வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது திமுக இளைஞர் அணி தம்பிமார்களுக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள்! வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா!” என்று குறிப்பிட்டுள்ளார்.