சஞ்சு சாம்சன்; அணியில் இடத்தை தக்க வைப்பாரா?

சஞ்சு சாம்சன்; அணியில் இடத்தை தக்க வைப்பாரா?

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி அதிகரித்து வருகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்தியா அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. இதனால் இந்திய அணி இப்போட்டியிலும் வெற்றியை பதிவு செய்து ஆதிக்கத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்திய அணிக்கு மிகப்பெரும் சிக்கலாக பார்க்கப்படுவது அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சனின் இடம் தான். ஏனெனில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர் என்ற இடத்தில் முதல் தேர்வாக சஞ்சு சாம்சன் இருந்தார். அதற்காக அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட ஷுப்மன் கில், அணியில் இருந்து அதிரடியாக நீக்கமும் செய்யப்பட்டிருந்தார்.

அதே சமயம் அணியின் மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட இஷான் கிஷன், முதல் போட்டியில் பெரிதளவில் சோபிக்க தவறினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக விளையாடி அசத்தினார். இதனால் தற்போது சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷனுக்கு அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கியுள்ளன. இது தற்சமயம் சஞ்சு சாம்சனுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.

அதனால் இன்றைய ஆட்டம் சஞ்சு சாம்சனை பொறுத்த வரையிலும் வாழ்வா? சாவா? என்ற நிலையில் உள்ளது. அதிலும் அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே என்ற நிலையும் உள்ளது. ஏனெனில் ஒருவேளை அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு பதில் அந்த வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாழங்கவும் வாய்ப்புள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் மீதான அழுத்தமும் அதிகரித்து வருகின்றது.

உத்தேச லெவன்

நியூசிலாந்து: டிம் செஃபெர்ட், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஜிம்மி நீஷம், மாட் ஹென்றி, இஷ் சோதி, லோக்கி ஃபெர்குசன்,

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன்/ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.