அதிமுக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்தது ஏன்? அமைச்சர் முத்துசாமி கொடுத்த விளக்கம்
திமுக கூட்டணியின் பலத்தை பார்த்து தான் டி.டி.வி. தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே கூட்டணியில் இணைந்திருப்பதாக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
'என் ஊர்... என் கனவு திட்ட'த்தின் கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து முன்னாள் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வீடியோ மூலம் பேசி தனது கருத்துக்களை தெரிவித்தார். இதே போல் ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களில் தனியார் பங்களிப்பு தொடர்பாக, தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கருத்துகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "என் ஊர் என் கனவு திட்டத்தின் கீழ் 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். பொதுமக்கள் அளித்ததில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்த ஆலோசனைகளை அரசு கவனத்தில் கொள்ளும்.
2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளின் பட்டியலை நான் தருகிறேன். எனது பட்டியலை அன்புமணி வெளியிட்ட பட்டியலுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, "எதிர்க்கட்சிகளை பார்த்து திமுக ஒருபோதும் பயப்படவில்லை. அவர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த முறையில் பதில் அளித்து வருகிறோம்.
அதிமுக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் சேர மாட்டார் என்று திமுக சொன்னதில்லை. ஆனால், திமுக கூட்டணியின் பலத்தை பார்த்து தான் இப்போது அவர்கள் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளனர். 1000 கட்சிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் திமுக பயப்படாது. மக்களுக்கு ஏராளமான நல்ல திட்டங்களை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அங்கீகரித்து விட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறினார்.