மருதமலை வனப் பகுதிக்குள் முருகன் சிலை - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் மருதமலையில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய முருகன் சிலை அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்திருந்தது.
ஆனால், வனப் பகுதிக்குள் முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் எஸ். முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முருகன் சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்த வழக்கறிஞர்கள் குழுவின் அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்தது.
மேலும், முருகன் சிலை நிறுவினால் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், வனவிலங்குகள் மற்றும் சுற்றசூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "முருகன் சிலைக்கு பூஜைகள் ஏதும் நடத்தப்படாது. சிலையை வலம் வந்து தரிசிக்க மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 137 மீட்டர் சுற்றளவுக்குள் வரும் இடத்துக்கு பதிலாக 437 மீட்டர் தொலைவில் மாற்று இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வேறு இடத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.