சிறுவனை கடத்தி பணம், கைக்கடிகாரம் பறிப்பு; ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது

சிறுவனை கடத்தி பணம், கைக்கடிகாரம் பறிப்பு; ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது

சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் 15 வயது சிறுவனை கடத்திச் சென்று பணம் மற்றும் கைக்கடிகாரத்தை பறித்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர், ஸ்ரீரங்கம் பாடசாலையில் புரோகிதம் படித்து முடித்து விட்டு சென்னை தாம்பரத்தில் தங்கி, புரோகிதத்துக்கு உதவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு செல்வதற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில், கையில் சிறு பையுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு ஆட்டோ வந்துள்ளது. அந்த ஆட்டோவில் ஓட்டுநரின் நண்பரும் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஏறியதும் ஆட்டோ ஓட்டுநர் அதிவேகமாக பெருங்களத்தூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத நெடுங்குன்றம் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுவனிடம், ''உன்னைப் பார்த்தால் கஞ்சா வியாபாரம் செய்வது போல் இருக்கிறது. கஞ்சா வழக்கில் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்'' என்று மிரட்டி சிறுவன் வைத்திருந்த ரூ.12,500 பணம் மற்றும் 3 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச் ஆகியவை பறித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சூர்யா

இதன் பின்னர் சிறுவனிடம் எடுத்த பணத்தில் 250 ரூபாய் பணத்தை மீண்டும் கொடுத்து இங்கிருந்து பத்திரமாக செல்'' என கூறி அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் சென்று விட்டனர். அதன் பின்னர், சிறுவன் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது அந்த ஆட்டோவின் பதிவு எண் தெரிய வந்தது. அதை வைத்து விசாரித்ததில், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சூர்யா (22) என்பவரின் ஆட்டோ என்பது தெரிந்தது.

அதன் பிறகு சூர்யா வீட்டுக்கு சென்ற தாம்பரம் போலீசார் விசாரித்ததில், சிட்லபாக்கம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சூர்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பீர்க்கன்காரணை ஸ்ரீராம் நகரை சேர்ந்த சேது (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்ட சேது 

பின்னர் இருவரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் சூர்யா மீது போக்சோ வழக்கு மற்றும் வழிப்பறி திருட்டு வழக்குகளும், சேது மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. அது மட்டுமின்றி, பணம் எப்போதெல்லாம் தேவைப்படுதோ அப்போதெல்லாம் சிறு சிறு திருட்டுகளில் இருவரும் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தனர்.

நேற்று இரவு அதிக கஞ்சா போதையில் இருந்ததால், தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், இனி தவறுகளே செய்ய மாட்டேன் என்றும், இருவரும் போலீசாரிடம் கதறி உள்ளனர். பிறகு அவர்களிடம் இருந்து சிறுவனின் வாட்ச், ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.