'விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என திரிஷாவிடம் கேளுங்கள்' - விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்
விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்? என நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும் என விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஆடுகள் வழங்கப்படுகிறது. திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களையும், முக்கியமாக அங்கீகாரத்தை கொடுத்து வருகிறது. ஆனால், தவெக தலைவர் விஜய் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை வைத்துக்கொண்டு தாய், தந்தையர்களை ஓரம் கட்டி வருகிறார். தவெகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை. கூடவே இருந்த ஜெயசீலன் உட்பட பலரும் இவருடன் தற்போது இல்லை.
புதிதாக கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் போன்றவர்களை வைத்து கட்சி நடத்தி வருகிறார்கள். அஜிதா என்ற நிர்வாகி விஜய் காரை மறித்தபோது, அந்த பெண்ணை அவர் பார்க்கவே இல்லை. ஒரு 3 நிமிடம் ஒதுக்கி, அவரிடம் என்ன குறை என்று கேட்டிருக்கலாம். தமிழகம் முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் விஜய் மீது அதிருப்தியில் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பொங்கலுக்குப் பின் திமுகவில் இணைக்கும் விழா நடைபெறும்.
விஜயை சுற்றி இருப்பவர்களுக்கு பணம்தான் முக்கியம். விஜய் கண்ணும் கருத்துமாக இல்லை. உண்மையான தீய சக்தி யார் என்றால் விஜய் தான். இவர் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டார். ரூ.200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன் என்கின்றாரே, 100 கோடி ரூபாய்க்கு இதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி இருக்கலாமே?” என்றார்.