ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் தான் விஜய் - அமைச்சர் கே.என். நேரு விமர்சனம்

ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் தான் விஜய் - அமைச்சர் கே.என். நேரு விமர்சனம்

எந்த அழுத்தத்திற்கும் பயப்படமாட்டேன் என்று கூறும் இதே விஜய் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றார் என்று அமைச்சர் கேஎன் நேரு விமர்சித்தார்.

திருச்சி மாநகர் தென்னூர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகி நினைவிடத்தில் திமுக சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பெரம்பலூர் எம்பி அருண் நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக இவர்கள் திருச்சி கோகினூர் சிக்னலில் இருந்து தென்னூர் வரை கருப்பு பட்டை அணிந்து பேரணியாக சென்றனர்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, '' மொழிக்காக பாடுபட்டு தனது இன்னுயிரை நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல் மூலமாக இன்றைய தலைமுறையினருக்கு அவர்களின் தியாகத்தை உணர்த்தி வருகிறோம். நேற்று முன்தினம் என்னிடம் ஒருவர் பேசினார்; நமது மாநிலத்தைப் போலவே ராஜஸ்தானும் ஒரு பெரிய மாநிலம். அங்கு 80 சதவீத மக்கள் தாய் மொழியை பேசி வந்தனர். ஆனால் தற்போது 20% பேர் மட்டுமே ராஜஸ்தான் தாய் மொழியை பேசுகிறார்கள். மீதம் உள்ளவர்கள் இந்தி மொழியை பேசி வருவதாக சொன்னார். இந்தி திணிப்பை திமுக தான் உறுதியாக எதிர்த்து வருகிறது.'' என கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், '' நடிகர் ஒருவர் (விஜய்) புதிதாக கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அவர் தனது கட்சி செயல்வீரர் கூட்டத்தில் பேசுகையில், '' என்னை பார்த்தால் பயப்படுகிற மாதிரியா தெரிகிறது... நான் ஒருபோதும் எந்த அழுத்தத்திற்கும் பயப்பட மாட்டேன்'' என்று வீர வசனம் பேசி இருக்கிறார். ஆனால் அந்த நடிகர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றார். தனது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது, நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை ஆகியோர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றனர். அதன் காரணம் அவர்கள் கொடுத்த அழுத்தம் தான். அவ்வாறு செயல்பட்டு விட்டு தற்போது வீர வசனம் பேசி வருகிறார்.'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தனித்தனியாக நின்றாலும் சரி, மும்முனை கூட்டணி வைத்து நின்றாலும் சரி திமுக தான் தேர்தலில் வெற்றி பெறும். மீண்டும் முதல்வராக ஸ்டாலின் அமர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை வருகின்ற தேர்தலில் திமுக மீண்டும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில தொகுதியில் வேட்பாளர்கள் சரியாக வாக்கு கேட்காததால் நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம், ஆனால் இம்முறை டெல்டா மாவட்டம் முழுவதும் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்.

வருகின்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களை கைப்பற்றுவதற்காக, முதல்கட்டமாக டெல்டா மாவட்டத்தில் மகளிர் அணி மாநாடு நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு பொதுக்கூட்டமும், மாநாடும் நடைபெறும். நிச்சயம் வருகின்ற தேர்தலில் டெல்டா மாவட்டம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிப் பெறும்.'' என பேசினார்.