"காந்தியை 2வது முறையாக கொன்றுவிட்டார்கள்" - ப.சிதம்பரம் விமர்சனம்

ப.சிதம்பரம், சென்னை ராயப்பேட்டையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பெயர் நீக்கம், நேஷனல் ஹெரால்ட் வழக்கு, மோடி அரசை கடுமையாக விமர்சித்தார்.

"காந்தியை 2வது முறையாக கொன்றுவிட்டார்கள்" - ப.சிதம்பரம் விமர்சனம்
"மகாத்மா காந்தியை 2வது முறையாக கொன்றுவிட்டார்கள்" என ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயர் நீக்கியது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நேஷனல் ஹெரால்ட் வழக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலிருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்குவது தொடர்பாகவும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.
நேஷனல் ஹெரால்டு தொடர்பாக அவர் பேசும்போது, ""சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கை ஜோடிக்கப்பட்ட வழக்கு எனவும் முறையான முதல் தகவல் அறிக்கை (FIR) இல்லாமல் அமலாக்கத்துறை இந்த வழக்கை பதிவு செய்தது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பணப்பரிமாற்றம் என்பது குற்றமல்ல, சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் மட்டுமே குற்றம். இந்த வழக்கில் எந்த பணப்பரிமாற்றமும் நடைபெறவில்லை எனவும் குற்றம் நடைபெறும் பட்சத்தில் அந்த குற்றத்தில் காவல்துறையோ அல்லது மத்திய புலனாய்வுத் துறையோ வழக்கு பதிவு செய்து அந்த வழக்கில் குற்றத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
முதல் தகவல் அறிக்கை இல்லாமல் ஒரு வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்வது அது மிகப்பெரிய சட்ட விரோதமாகும்.
2013 ஆம் ஆண்டு ஒரு தனி நபர் ஒரு தனிப்பட்ட புகாரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அது முதல் தகவல் அறிக்கை இல்லை எனவும் அது தனிநபரின் குற்றச்சாட்டு அதை எந்த காவல்துறையும் எந்தப் புலனாய்வுத் துறையும் விசாரிக்கவில்லை.
பின்னர் தனிப்பட்ட நபரின் புகாரை 2021 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பதிவு செய்கிறது. 8 ஆண்டு கழித்து பதிவு செய்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்துள்ளது.
தொடக்கத்திலே எங்கள் தரப்பில் சொல்லப்பட்டது. முதல் தகவல் அறிக்கை கிடையாது எந்த ஒரு காவல்துறையும், புலனாய்வுத் துறையும் வழக்கு பதிவு செய்யவில்லை எனவே சட்ட விரோதமான பணப் பரிமாற்றம் என்பது நடைபெறவில்லை என்று எங்களுடைய வாதமாக இருந்தது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு நீதிபதி தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.
முதல் குற்றம் பதிவு செய்யாமல் இரண்டாவது குற்றத்தைப் பதிவு செய்யவே முடியாது. அமலாக்கத்துறை பெரும் பிழையை செய்திருக்கிறது. சட்ட விரோதமான நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் என்று நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.
இந்த வழக்கில் யாரும் யாருக்கும் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு கிடையாது. ஒன் இந்தியா என்ற நிறுவனம் பழைய கம்பெனி Sec 25 வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். புதிய கம்பெனி சட்டத்தின் எட்டாவது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அதன்மூலம் ஒரு ரூபாய் கூட எவராலும் எடுக்க முடியாது. லாபத்தில் பங்கு கேட்க முடியாது, தனது தனிப்பட்ட செலவுக்கு பணம் வாங்க முடியாது, இப்படி பல முறைகள் இருக்கின்றன.
இந்த நிறுவனம் தொடங்கும் போதே லாபமும் கிடையாது, லாபத்தை பிரித்தும் கொடுக்கவில்லை எவருக்கும் சம்பளமும் கொடுக்கப்படவில்லை, அதன்படி பார்த்தால் பணம் பரிமாற்றம் இருந்தால் தானே சட்டப் பணப் பரிமாற்றம் என்று கூற முடியும்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது தொடர்ந்து பழி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது எங்களுடைய கருத்தாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தாலும் சொத்துகளை முடக்க முடியாது. ஒன் இந்தியா என்பது ஒரு பங்குதாரர். அதற்கு சொத்து கிடையாது. அதை யாராலும் வாங்கவும் விற்கவும் முடியாது எனவும் அவர் கூறினார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெயர் மாற்றம் குறித்து பேசுகையில், இத்திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை "மகாத்மா காந்தியின் இரண்டாவது கொலை" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் புதிய சட்டத்தில் இத்திட்டத்தின் பெயர் விபி ஜிராம்ஜி என மாற்றப்பட்டுள்ளதாகவும், இது வாயில் நுழையாத பெயராக இருக்கிறது எனவும் ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் புரியாது, ஹிந்தி தெரிந்தவர்களுக்கும் புரியாது எனவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து புதிய சட்டத்தின்படி, இத்திட்டம் இனி நாடு முழுவதும் அமலாகாது என்றும், மத்திய அரசு குறிப்பிடும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே தரும். அதற்கு மேல் ஆகும் செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
முன்பு 'வேலை கேட்டால் கொடுக்க வேண்டும்' என்று இருந்தது. இப்போது 'வேலை கொடுத்தால் மட்டுமே கேட்க முடியும்' எனமாற்றப்பட்டுள்ளது.
பழைய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை திட்டம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். உத்தரவாதம் இருந்தது. ஊதியம் வழங்க அனைத்து நிதியையும் மத்திய அரசு பொறுப்பெடுத்து செயல்பட்டது. மாநில அரசின் பங்களிப்பு என்பது 25% ஆகும். வேலை கேட்டு வேலை மறுக்கப்படும் பட்சத்தில் பயணப்படி வழங்கப்பட்டுள்ளது. 95 சதவீதம் பெண்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது.
2004, 2005 பட்ஜெட்டில் அறிவித்தபோது அதற்குப் பின்னாடி 8, 6 மாத காலங்கள் நீண்ட நெடிய கலந்து ஆலோசனை செய்த பின்னரே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் ஏக மனதாக ஏற்கப்பட்டது. பாஜகவால் எதிர்க்க முடியவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக வாஜ்பாய் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு இந்தத் திட்டத்தை ஆதரித்தனர்.
தற்போது நிதி ஆதாரத்தை மாநில அரசுகளின் பொறுப்பிற்குத் தள்ளுவதால், பாதுகாப்பு வலையையே எடுத்துவிட்டார்கள். 12 கோடி மக்கள் இத்திட்டத்தை நம்பி இருக்கிறார்கள். வருடத்தில் 60 நாட்கள் இந்த திட்டத்தை அமலாக்க முடியாது. அதாவது விவசாயப் பருவகாலங்களில் இந்த திட்டத்தை அமலாக்க முடியாது எனவும் இந்த புதிய சட்டத்தில் பல கோடிகள் குறைபாடு உள்ளது. மேலும் இந்த சட்டம் உத்தரவாதம் இல்லாத ஒன்று. நல்ல வேளை இந்த திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயர் வைக்க விரும்பவில்லை. அன்றாடக் கூலி கிடைக்காவிட்டால் ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரியாது எனவும் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மோசடியை வீடு வீடாகச் சென்று அம்பலப்படுத்துவோம்; சட்டம் ரத்தாகும் வரை காங்கிரஸ் போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.
2015-லேயே மோடி இத்திட்டத்தை தோல்வியின் சின்னம் என்று எள்ளி நகையாடினார், இப்போது அதை சிதைக்கிறார் மேலும் காந்தி மற்றும் நேருவின் பெயரை இந்திய வரலாற்றில் இருந்தும் மக்களின் ஆழ்மனதில் இருந்தும் யாராலும் நீக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் 66 லட்சம் பேர் நீக்கப்பட்டதை அதிமுக ஆதரிப்பது வியப்பளிக்கிறது என்றும் அதிமுகவிற்கு பாஜக தான் முதலாளி எனவே முதலாளி சொல்கிறதே தான் அவர்கள் செய்வார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
கொரோனா காலங்களில் உலக நாடுகளில் பிரதமர் மோடியின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, மும்பை, பெங்களூர் தமிழ்நாடு போன்ற நகரங்களில் இருந்து கோடி கணக்கான மக்கள் நடந்தே சென்றார்கள், ரயில் கிடையாது, பேருந்து கிடையாது பட்டினியோடு நடந்தே சென்றார்கள். நடந்து செல்லும் போதே பல பேர் இறந்ததையும் நாம் பார்த்தோம் என்று அவர் கடுமையான விமர்சனத்தை வைத்தார்.