காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்!
காணும் பொங்கலைக் கொண்டாட சுற்றுலாத் தலங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகையின் 4-ம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் பொது இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக மக்கள் பொழுது போக்குவது வழக்கம். அதன்படி சென்னையின் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் நேற்று காலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர்.
குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும், காசிமேடு மீன்பிடி துறைமுகம். திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடற்கரை, சென்னை புறநகரில் மாமல்லபுரம். கோவளம் கடற்கரைகளிலும் காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
மேலும், கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலும் பொது மக்கள் காலையிலேயே தங்களது குடும் பத்தோடு திரண்டு வந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவிலும், கிண்டி சிறுவர் பூங்காவிலும் அதிகளவில் மக்கள் குவிந்ததால் நுழைவுச் சீட்டு வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 'சென்னை உலா' என்ற வின்டேஜ் தோற்றத்திலான பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதும், அந்தப் பேருந்துடன் புகைப்படம் எடுப்பதுமாக இளைஞர்கள் காணும் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பொருட்காட்சியிலும் கூட்டம் அலைமோதியது. அங்கே இருந்த ராட்டினங்களில் ஏற நீண்ட வரிசையில் சிறுவர், சிறுமியர் காத்திருந்தனர்.