திருப்பரங்குன்றம் வழக்கு: தலைமை செயலாளர், ஏடிஜிபி டிச.17-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் வழக்கு: தலைமை செயலாளர், ஏடிஜிபி டிச.17-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிச.17-ல் காணொலி வாயிலாக ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

டிச.3-ல் மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறியதை ஏற்கலாம். மறுநாள் அந்த 144 தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கிவிட்டது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுக்க போலீஸாருக்கு எந்தகாரணமும் இல்லை. மேலும் 144 தடையை நீக்கி மாநகர் காவல் ஆணையர் முன்னிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மறுநாள் காவல் ஆணையர் லோகநாதன் அங்கிருல்லாமல் பொறுப்பை காவல் துணை துணை ஆணையர் இனிகோ திவ்யனிடம் வழங்கியுள்ளார். அவரும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குறைபாடுள்ள மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இதுவரை தலையிடவில்லை. உயர் நீதிமன்ற அமர்விலும் மேல்முறையீட்டு மனு மீது எந்த இடைக்கால தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும்.

ரிட் மனு மீது பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் டிச.3-ல் அவமதிப்பு மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு டிச.4-ல் அமர்வால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டிச.3-ல் பிறப்பித்த உத்தரவு டிச.4-ல் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

தனி நீதிபதியின் உத்தரவின் மேல் எந்த இடைக்கால தடையும் இல்லாத நிலையில், மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருப்பது அவமதிப்பு வழக்கின் விசாரணைக்கு தடையாக இருக்காது.

இந்த அவமதிப்பு வழக்கு மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் நீதிமன்ற உத்தரவை இரு முறை அமல்படுத்தாதது தொடர்பானது. நீதிமன்ற உத்தரவு மீறப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை இவ்வளவு துணிச்சலுடன் மீறத் துணிய மாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை சட்டத்தை அமல்படுத்துவதும், பெரும்பாலும் வாய்மொழியாக பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததும் தான். உயர் அதிகாரியின் உத்தரவும் பின்பற்றப்பட வேண்டும் என்றாலும், சட்டவிரோத உத்தரவுகளை பின்பற்ற வேண்டியதில்லை. இந்த அவமதிப்பு வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் மீண்டும் மீறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே மீறப்படும் போது அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க வேண்டியது வரும். நீதிமன்ற உத்தரவை மீறியது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்க வேண்டும்.

இதுபோன்று கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து இந்த நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு எதேனும் சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தல்கள் வழங்க தயாராக உள்ளார்களா என்பதை தெரிய விரும்புகிறேன்.

நான் இங்கு கைகளை விரித்து, "ஓ தந்தையே, அவர்களை மன்னியுங்கள், ஏனென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது" என்று கூச்சலிட வரவில்லை. இதனால் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோர் 17.12.2025 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

மனுதாரர்கள் மத்திய உள்துறை செயலாளரை வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க கோரியுள்ளனர். அதன்படி மத்திய உள்துறை செயலாளர் 4-வது எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் பதிலளிக்க வேண்டும். விசாரணை டிச.17-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.