படுத்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா..? இதயத்திற்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.!

படுத்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா..? இதயத்திற்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.!
படுத்தவுடன் மூச்சு விட சிரப்படுவதும், எழுந்து உட்கார்ந்த பிறகு சரியாவதும் ஆர்த்தோப்னியா எனப்படும் இதய செயலிழப்பு, நுரையீரல் சிக்கல் போன்றவற்றின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.
ஒருவர் படுத்தவுடன் மூச்சு விட சிரமம் ஏற்பட்டு, உட்கார்ந்தவுடன் நிவாரணம் கிடைக்கும் நிலையே ஆர்த்தோப்னியா (Orthopnea) என்று அழைக்கப்படுகிறது. இது சாதாரண சுவாசக் குறைபாடு மட்டுல்ல, பெரும்பாலும் இதய செயலிழப்பு, நுரையீரலில் திரவக் குவிப்பு, ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) போன்ற முக்கிய மருத்துவ சிக்கல்களின் எச்சரிக்கை அறிகுறிகளாகவும் இருக்கலாம். தலையணைகளை அடுக்கி வைத்து தூங்க வேண்டிய நிலை கூட இந்த மறைக்கப்பட்ட பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மார்பில் ஒரு கனமான எடை வைக்கப்பட்டது போல் அல்லது வாய் வழியாக சுவாசிக்க முயல்வது போன்ற உணர்வு ஏற்படுவது ஒள்றும் சாதாரணமானதல்ல. அதை அனுபவிக்கும் நபருக்கு இது மிகுந்த பயத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
ஆர்த்தோப்னியா என்றால் என்ன? சாதாரண மூச்சுத் திணறலிலிருந்து இது எப்படி வேறுபடும்?
மும்பை நானாவதி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலையீட்டு இருதயவியல் நிபுணரான டாக்டர் சமீர் பகட் விளக்குகையில், ஆர்த்தோப்னியா என்பது தட்டையாகப் படுக்கும் போது மட்டும் ஏற்படக்கூடிய மூச்சுத் திணறலைக் குறிக்கிறது.
சாதாரணமான மூச்சுத் திணறல், பெரும்பாலும் ஓடும் போது, பரபரப்பாக வேறு ஏதேனும் வேலை செய்யும் போது போன்றவற்றுக்கு பின் வரும்.
இது ஏன் இதய செயலிழப்பின் எச்சரிக்கை?
படுத்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படுவது பல நேரங்களில் இதயம் பலவீனமானதற்கான முக்கிய எச்சரிக்கையாகும். இது நேரடியாக இடது இதய செயலிழப்பின் அறிகுறி ஆகக் கருதப்படுகிறது. இது மாரடைப்பு அல்ல, ஆனால் இதயத்தின் பம்ப் திறன் குறைந்து வருகிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.
தட்டையாகப் படுப்பதால் உடலின் கீழ் பகுதியில் இருக்கும் இரத்தம் மார்பு பகுதிக்குச் செல்வதால், இதயம் மற்றும் நுரையீரல் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, இதயம் பலவீனமாக இருந்தால் அதை சமாளிக்க முடியாது. இது நுரையீரல்களில் திரவம் சேர்வதற்கும், மூச்சுத் திணறலுக்கும் வழிவகுக்கிறது.
படுக்கையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
படுக்கையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் முதலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு, பின்னர் ஜன்னல் அருகே சென்று ஆழமாக சுவாசிக்க வேண்டும். உடனடி நிவாரணம் கிடைக்காவிட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கு மருத்துவர் மார்பு பகுதியில் எக்ஸ்ரே, ஈசிஜி, எக்கோ கார்டியோகிராம் போன்ற அடிப்படை பரிசோதனைகள் மூலம் காரணத்தை மதிப்பீடு செய்து தேவையான சிகிச்சையை மேற்கொள்வார்.
இளைஞர்கள் எதை கவனிக்க வேண்டும்?
திடீர் மார்பு அசௌகரியம், ஓய்விலோ அல்லது வேலை செய்யும் போதோ ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல், படுத்தவுடன் மூச்சுத் திணறல் (ஆர்த்தோப்னியா), கால்களில் வீக்கம், அசாதாரண இதயத் துடிப்பு போன்றவை எந்த வயதினரும் புறக்கணிக்கக் கூடாத முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும். மேலும், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம்.
இரவில் மூச்சுத் திணறல் வந்து தூக்கத்திலிருந்து எழும்ப வேண்டியிருக்கிறதா?
இது மிகப் பெரிய பாதிப்பாகவே கருதப்படுகிறது, ஏனெனில் இதய செயலிழப்பு அல்லது வால்வு நோய்கள், நுரையீரல் அடைப்பு (Asthma/COPD), அதிக உடல் எடை காரணமாக உண்டாகும் தூக்கத்தில் மூச்சுத்திணறல், நுரையீரலில் திரவம் சேர்தல் போன்ற எந்த நிலையையும் இது சுட்டிக்காட்டக்கூடும். ஆகையால், இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும் போதே உடனடி மருத்துவ பரிசோதனை அவசியம்.