மாதவிடாய் நாட்களில் சுறுசுறுப்பாக்க இருக்க உதவும் உணவுகள் - நோட் பண்ணிக்கோங்க!
மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். இந்த சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி, சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் தசைப்பிடிப்பு போன்றவற்றை நாம் உண்ணும் உணவின் மூலம் பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அந்த வகையில், மாதவிடாய் நாட்களை ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் கடக்க உதவும் சில சிறந்த உணவுகள் மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பெண்களின் மாதவிடாய் சுழற்சி என்பது வெறும் ரத்தப்போக்கு மட்டுமல்ல, அது ஹார்மோன்களின் தாக்கம். இந்த நாட்களில் உடலில் இரும்புச்சத்து குறைவதுடன், தசைப்பிடிப்பால் மிகுந்த அசதி ஏற்படும். நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த அசௌகரியங்களை விரட்டி, உற்சாகமாகச் செயல்பட முடியும். அவற்றின் விவரம் பின்வருமாரு.
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்: மாதவிடாய் சமயத்தில் பலருக்கும் தலைவலி மற்றும் உடல் வீக்கம் (Bloating) ஏற்படும். இதற்கு உடலில் நீர்ச்சத்து குறைவதே முக்கிய காரணம். வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி போன்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உண்பது உடலை ஹைட்ரேட்டடாக வைத்திருக்க உதவும். மேலும், இதில் உள்ள இயற்கையான சர்க்கரை, அந்த நாட்களில் ஏற்படும் இனிப்பு க்ரேவிங்ஸை (Sugar cravings) பூர்த்தி செய்யும்.
இரும்புச்சத்து மிகுந்த கீரைகள்: அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக உடலில் இரும்புச்சத்து குறைய வாய்ப்புள்ளது. இது சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் உடல் வலியை உண்டாக்கும் என்கிறது NHS ஆய்வு. இதனைச் சரிசெய்ய கீரை, முளைக்கீரை, மற்றும் காலே (Kale) போன்ற பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து சோர்வை நீக்கும்.
இஞ்சி மற்றும் இஞ்சி டீ: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் வயிற்று வலிக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் (Anti-inflammatory properties) தசை வலியைப் போக்கி உடலுக்கு இதமளிக்கும். ஒரு கோப்பை மிதமான இஞ்சி டீ குடிப்பது வயிற்றுப் பிடிப்பைக் குறைக்க உதவும்.
புரதம் நிறைந்த சிக்கன் மற்றும் மீன்: உடல் ஆரோக்கியத்திற்குப் புரதம் மிக அவசியம். சிக்கன் சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தும் புரதமும் கிடைக்கிறது. இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி, தேவையற்ற நொறுக்கு தீனிகள் உண்பதைத் தடுக்கும். மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மாதவிடாய் கால மன அழுத்தத்தை குறைத்து, வலியை கட்டுப்படுத்த உதவுகின்றன என Effect of omega-3 fatty acids on intensity of primary dysmenorrhea என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டார்க் சாக்லேட்: மாதவிடாய் காலத்தில் சாக்லேட் சாப்பிட தோன்றுவது இயல்பு. அதற்குப் பதிலாக 'டார்க் சாக்லேட்' சாப்பிடுவது சிறந்தது. இதில் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகளவில் உள்ளன. மெக்னீசியம் தசைகளைத் தளர்த்தி வலியைக் குறைக்க உதவுவதோடு, மனநிலையைச் சீராக வைத்திருக்கவும் உதவுகிறது என NCBI ஆய்வுத்தளத்தில் வெளியான ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தயிர் மற்றும் புரோபயாட்டிக் உணவுகள்: செரிமான பிரச்சனைகள் மாதவிடாய் காலத்தில் சிலருக்குத் தலைதூக்கும். தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்பசத்தைக் குறைக்கின்றன. இதில் உள்ள கால்சியம் மாதவிடாய் கால தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
கவனிக்க வேண்டியவை: உணவில் உப்பு மற்றும் சர்க்கரையைச் சற்று குறைத்துக்கொள்வது உடல் வீக்கத்தைக் குறைக்க உதவும். அதேபோல், அதிகப்படியான காபி குடிப்பதைத் தவிர்த்து, மூலிகை தேநீர் அல்லது இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு பெண்ணின் உடலும் ஒரு விதம். எனவே உங்கள் உடலுக்கு எது ஒத்துப்போகிறது என்பதைப் புரிந்து உணவைத் தேர்ந்தெடுங்கள். ஆரோக்கியமான உணவு முறை, போதிய உறக்கம் மற்றும் மிதமான நடைப்பயிற்சி ஆகியவற்றை மாதவிடாய் காலத்தில் கடைப்பிடித்தால், அந்த நாட்களையும் எளிமையாக கடந்து செல்லலாம்.