அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா-ரஷ்யா கூட்டணியா? புதின் பதில்
இந்தியா, ரஷ்யா இடையேயான நட்புறவு, அமெரிக்கா உள்ளிட்ட எந்த 3வது நாட்டிற்கும் எதிரானது கிடையாது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
2 நாள் அரசு முறை பயணமாக புதின், டெல்லிக்கு இன்று வந்தார். இதையொட்டி, இந்திய தொலைகாட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எந்த அளவுக்கு நானும், பிரதமர் மோடியும் எந்தளவு வெளிநாடுகளிடம் இருந்து அழுத்தத்தை சந்தித்து வருகிறோம் என உங்களுக்கு தெரியும். அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தனித் திட்டம் உள்ளது. தனி குறிக்கோள் உள்ளது. அதுபோலதான் எங்களுக்கும்.
இந்தியா, ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பானது, எந்தவொரு 3வது நாட்டிற்கு எதிரானதும் கிடையாது. இதில் அமெரிக்காவும் அடங்கும். இந்தியா, ரஷ்யா நலன்களை கருத்தில் கொண்டே 2 நாடுகளும் செயல்படுகின்றன.
பிற நாடுகளுககு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடாது என்பது எங்களின் நோக்கம். இதை பிற நாடுிகளின் தலைவர்கள் ஊக்குவிக்க வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கக் கூடாதென டிரம்ப் தெரிவிக்கிறார். இந்தியாவானது கச்சா எண்ணெய்யை மட்டுமே வாங்குகிறது. அதேநேரத்தில் அமெரிக்காவோ, அந்நாட்டில் உள்ள அணுமையங்களுக்கு தேவையான அணு திடவத்தை (மூலப் பொருள்களை) எங்கள் நாட்டிடம் இருந்தே வாங்குகிறது.
ரஷ்யாவிடம் இருந்து அணு திடவத்தை வாங்க அமெரிக்காவிற்கு மட்டும் உரிமை உண்டு எனில், இந்தியாவுக்கு ஏன் அது இருக்கக் கூடாது? இந்த கேள்வி, ஆராயப்பட வேண்டியதாகும். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட யாரிடம் வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.