பப்பாளி பழத்துடன் சாப்பிடக்கூடாத 5 உணவுகள் - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

பப்பாளி பழத்துடன் சாப்பிடக்கூடாத 5 உணவுகள் - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

பப்பாளி பழம் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். ஆனால், அந்த ஆரோக்கியமே சில குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது ஆபத்தாக மாறலாம். நீங்கள் அன்றாடம் பப்பாளி சாப்பிடும் பழக்கம் உள்ளவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆரோக்கியம் என நினைத்து பப்பாளி பழத்துடன் நாம் சாப்பிடும் சில உணவுகள் உடலில் காலப்போக்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், பப்பாளி பழத்துடன் தவறியும் சேர்த்துக்கொள்ளக் கூடாத 5 பொதுவான உணவுகள் மற்றும் அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பப்பாளி, வைட்டமின் சி, ஃபைபர் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃப்ரூட். இது செரிமானத்திற்கு உதவுவதுடன், சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது. இருப்பினும், இந்த அற்புதமான பழத்தை மற்ற சில பொதுவான உணவுகளுடன் சேர்த்து உண்ணும்போது, அது செரிமான அமைப்பைக் குழப்பி, வாயு, அஜீரணம் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

கோப்புப்படம்

பப்பாளியில் உள்ள 'பப்பாயின்' என்ற நொதி தான் இதற்கு காரணம். இந்த நொதி குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுடன் எதிர்வினையாற்றுவதால் ஏற்படும் 5 பிரச்சனைகள் குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

பப்பாளியுடன் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!

பால் பொருட்கள்: பப்பாளி பழம் சாப்பிட்ட உடனேயே அல்லது அதனுடன் சேர்த்து பால், தயிர், மோர் போன்ற பால் பொருட்களை உட்கொள்வது மிகவும் தவறு. பப்பாளியில் உள்ள 'பப்பாயின்' நொதியானது, பாலில் உள்ள 'கேசீன்' எனப்படும் புரதத்தை உடைக்க முயற்சிக்கும்போது, செரிமான செயல்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்கிறது NCBI ஆய்வு.

இதனால் வயிற்றில் வாயு, உப்புசம், அஜீரணம், வயிற்று வலி மற்றும் சில சமயங்களில் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது அதிக பிரச்சனையை உருவாக்கலாம். நன்கு பழுத்த பழம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படாது.

எலுமிச்சை போன்ற அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழங்கள்: பப்பாளி ஒரு அமிலத்தன்மை குறைந்த பழம். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப்பழம் போன்ற அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழங்களை பப்பாளியுடன் சேர்க்கும்போது, இவற்றின் மொத்த அமிலத்தன்மை வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும்.

பப்பாளி மற்றும் எலுமிச்சையை ஒரே நேரத்தில் உட்கொள்வது ரத்த சிவப்பணுக்கள் அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இது ரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கலாம்.

கோப்புப்படம்

அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகள்: பப்பாளியில் உள்ள பப்பாயின் நொதி புரதத்தை செரிக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த நொதியாகும். ஆனால், பப்பாளியுடன் சேர்ந்து அதிகப்படியான புரதச்சத்து நிறைந்த உணவுகளை உதாரணமாக, முட்டை அல்லது இறைச்சியை ஒரே நேரத்தில் சாப்பிடும்போது, செரிமான செயல்முறைக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இதனால் புரதங்கள் சரியாகச் செரிக்கப்படாமல் வயிற்றில் தங்கி, புளித்துப்போக தொடங்கலாம். இது கடுமையான உப்புசம், வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிகப்படியான வாயுவை ஏற்படுத்தும்.

டீ: பப்பாளி பழம் சாப்பிட்ட பிறகு உடனே டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால், பப்பாளியில் உள்ள பப்பாயின் மற்றும் தேநீரில் உள்ள 'கேட்டசின்' ஆகியவை ஒன்று சேரும்போது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும் எதிர்வினை நிகழ வாய்ப்புள்ளது. இதனால் நெஞ்செரிச்சல், கடுமையான அஜீரணம் மற்றும் வாயுத் தொல்லைகள் ஆகியவை ஏற்படுகின்றன.

அதிக இனிப்புகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்: பப்பாளி பழத்தில் இயற்கையாகவே இனிப்பு மற்றும் சர்க்கரைச் சத்து உள்ளது. இதனுடன், அதிகப்படியான வெள்ளை சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புப் பொருட்களை சேர்த்து உட்கொள்ளும்போது, சர்க்கரையின் அளவு திடீரென உச்சத்தை அடையும்.

கோப்புப்படம்

ரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர்ந்து இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். அத்துடன், இந்த கலவையானது வயிறு வீக்கம் மற்றும் வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பப்பாளி பழத்தை தனியாகச் சாப்பிடுவதே எப்போதும் சிறந்த வழியாகும். நீங்கள் வேறு ஏதேனும் உணவை பப்பாளியுடன் சேர்த்துச் சாப்பிட விரும்பினால், குறைந்தது 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு எடுத்துக்கொள்வது செரிமானப் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். குறிப்பிட்ட உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் குறிப்பாக கர்ப்பிணிகள், ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் பப்பாளி சாப்பிடும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.