விழுப்புரத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத பொங்கல் விழா

விழுப்புரத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத பொங்கல் விழா

வானூர் அருகே உள்ள நைநார் மண்டம் கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் இன்று பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். செழிப்பும், மகிழ்ச்சியும் பெருக காலையிலேயே பொங்கல் வைத்து, சூரியனை வழிபட்டனர். அனைவரும் குடும்பமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் கிராமங்களில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கோலாட்டம், மயிலாட்டம், உருமியாட்டம் என பாரம்பரிய நடனங்களுடன் விழாக்கள் களைகட்டின. மேலும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. குறிப்பாக, மதுரை அவனியாபுரத்தில் இன்று உலக பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நாளையும் நாளை மறுநாளும் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழாக்கள் நடைபெறவுள்ளன.

இப்படி பொங்கல் பண்டிகை என்றாலே குடும்பங்களும் உறவினர்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதுதான். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நைநார் மண்டம் கிராமத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள கோயிலில் தமிழர் திருநாள் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஆண்கள் அனைவரும் ஊரிலுள்ள குளத்தின் கரையில் பொங்கல் வைப்பார்கள். இன்று பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புது பானையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி, குளத்திலிருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து கொண்டுவந்து வெல்லந்தாங்கி அய்யனார் கோயில் அருகில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியதும், முதலில் சாமிக்கு படையில் இட்டு கூடியிருந்த அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். இங்கு செய்யப்படுகிற பொங்கலை விழாவில் பங்கேற்கிற ஆண்கள் மட்டுமே உண்பார்கள்.

இந்த கிராமத்தில் இவ்வாறு பொங்கல் வைக்கும் பழக்கத்தை தங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர். இப்படி பொங்கல் வைப்பதால் தங்களது விவசாயம் மட்டுமல்லாமல் கால்நடைகளும், தலைமுறை தலைமுறையாக பிள்ளைகளும் தழைத்தோங்குவதாக கூறுகின்றனர். ஆண்கள் ஒன்றுகூடி பொங்கல் வைக்கும் நேரத்தில் பெண்கள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.