சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு.. விஜய்யின் வாழ்த்து தேர்தலுக்காக இருக்கலாம் - தமிழிசை செளந்தரராஜன்

சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு.. விஜய்யின் வாழ்த்து தேர்தலுக்காக இருக்கலாம் - தமிழிசை செளந்தரராஜன்

தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு என விஜய் கூறுவது தேர்தலுக்காக இருக்கலாம் என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பாஜக நிர்வாகிகளோடு மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்‌. தொடர்ந்து பாஜக மகளிர் அணியினரோடு, 'மோடி பொங்கல், என்டிஏ பொங்கல்' என்று முழங்கியபடி தமிழிசை செளந்தரராஜன் நடனமாடினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''உலகத் தமிழர் அனைவருக்கும் தைத்திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். டெல்லியில் தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

'பராசக்தி படக்குழு வந்தது பாஜகவிற்கு பலம்...'

அந்த விழாவில் பராசக்தி பட குழுவும் பங்கேற்றது. பராசக்தி படத்தில் காங்கிரசின் கோர முகத்தை காண்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த பொங்கல் விழாவிற்கு பராசக்தி படக்குழு வந்தது பாஜகவிற்கு மேலும் சக்தியை வலுப்படுத்தி உள்ளது. விஜய் நடிகராக இருந்திருந்தால் அவரையும் அழைத்து இருப்போம். விஜய் ரசிகர்கள், 'ஜனநாயகன் எப்போது வருகிறதோ அப்போது தான் எங்களுக்கு பொங்கல்' என்று கூறிவிட்டார்கள். அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கலை கொண்டாடுவோம்'' என்றார்.

'தமிழக அரசின் நிகழ்ச்சிகளுக்கும் நடிகர்கள் அழைக்கப்படுகிறார்கள்...'

தொடர்ந்து பேசிய அவர், ''தமிழக அரசு சார்பில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சிகளில், நடிகர்களை அழைக்கும் போது யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், ஆனால் பாஜக அழைத்தால் மட்டும் பிரச்சனையாகிறது. தமிழ் திரை கலைஞர்களுக்கு டெல்லியில் மரியாதை கொடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தமிழ் திரை கலைஞர்களுடன் பொங்கல் கொண்டாடினார் என்று தான் பெருமைப்பட வேண்டும்'' என தெரிவித்தார்.

'திமுக பதட்டத்தோடு உள்ளது...'

விஜய்யின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியது மற்றும் 'ஜனநாயகன்' பட விவகாரத்தில் ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து பேசிய தமிழிசை, ''தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆனால், சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு. விஜய் தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு எனக் கூறுவது தேர்தல் காரணத்திற்காக கூட இருக்கலாம். ஜனநாயகன், சிபிஐ என விஜய் விவகாரத்தில் என்ன நடந்தாலும் பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பேசுவது தவறானது. தேர்தல் நெருங்க, நெருங்க திமுக பதட்டத்தோடு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கையை இந்தி திணிப்பு என எப்படி உதயநிதியால் பேச முடியும். பிரதமர் மோடி தமிழ் மக்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பது நேற்றைய பொங்கல் விழாவில் தெரிந்தது. தேர்தல் ஆதாயத்திற்காக ராகுல் காந்தி மோடியின் மீது விமர்சனம் செய்கிறார்‌.'' என்றார்.