கொட்டித் தீர்த்த கனமழை... வானிலை மையம் சொன்ன தகவல்
வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை தமிழகத்தில் 40 செ.மீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 6 சதவீதம் அதிகமாகும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை (டிச.12) முதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 15-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 16-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 17-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 15-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 2 செமீ, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேதாரண்யம், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.