ஹெச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
திருப்பரங்குன்றம் செல்ல முயன்றபோது திருப்பத்தூர் அருகே போலீஸார் தடுத்ததால், வாக்குவாதம் செய்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
காரைக்குடியிலிருந்து திருப்பரங்குன்றத்துக்கு டிச. 4 மாலை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா காரில் சென்று கொண்டிருந்தார். அவரை திருப்பத்தூர் அருகே கும்மங்குடியில் டிஎஸ்பி செல்வக்குமார் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து தன்னை போலீஸ் வாகனத்தில் ஏற்றுவதற்கான உரிய காரணத்தை எழுத்துபூர்வமாக தருமாறு ஆவேசமாக பேசினார். அவருக்கு ஆதரவாக பாஜகவினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்களும் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய 3 பிரிவுகளில் ஹெச்.ராஜா மீது நாச்சியார்புரம் போலீஸார் வழக்கு பதிந்தனர்.