பராசக்தி படத்தை இன்னும் பார்க்கவில்லை; தணிக்கை சர்ச்சைகளுக்கு கனிமொழி பதில்
சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி வளாகத்தில் சென்னை சங்கமம் கலைஞர்களுடன் திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி பொங்கல் கொண்டாடினார்.
இந்நிகழ்வில் கரகாட்டம், மயிலாட்டம், பறை இசை வாத்தியங்கள் முழங்க ஏராளமான கலைநிகழ்ச்சிகளும், களரி உள்ளிட்ட வீர விளையாட்டுகளும் நடைபெற்றன. மேலும் சென்னை சங்கமம் கலைஞர்களுக்கு பொங்கலை முன்னிட்டு புத்தாடைகளையும் கனிமொழி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம், டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதே போல, பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர். டெல்லியில் நடந்த இந்த விழாவில் சென்னையில் இருந்து சென்ற பராசக்தி படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ''நாம் பொங்கலை பற்றி நாம் பேசுவோம். தேர்தல் நேரத்தில் மட்டும் பொங்கலை நினைவுகூறுபவர்கள் (பாஜக) பற்றி பேசி எந்த பயனுமில்லை'' என தெரிவித்தார். மேலும், பராசக்தி படக்குழு டெல்லிக்கு சென்றது தொடர்பான கேள்வியை தவிர்த்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பராசக்தி திரைப்படத்தை விமர்சனம் செய்து வருவது குறித்த கேள்விக்கு, ''பராசக்தி படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்காத படத்தைப் பற்றி எப்படி கருத்து கூற முடியும்.'' என்றார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழக அரசின் கருத்தை மத்திய அரசு கேட்டிருப்பதை குறித்து, 'முதலமைச்சர் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துவிட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தமிழக அரசு உரிய விளக்கத்தை விரைவில் அளிக்கும்'' என தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளதா என்ற கேள்விக்கு, ''சினிமாவையும், அரசியலையும் கலக்கும் போது தான் பிரச்சனை வருகிறது. முதலில் கருணாநிதி எழுதிய பராசக்தி படம் சென்சாரில் எந்த அளவுக்கு பாடுபட்டு வெளியிடப்பட்டது என எல்லாம் தெரியும். எனவே சென்சாரை கருவியாக மாற்றப்படும் போது மக்களுக்கு எதிரானதாகவும், ஆளும் கட்சி கையில் இருக்கக்கூடிய ஆயுதமாகவும் இருக்கிறது'' என்றார்.