BREAKING: விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யை இன்று நேரில் சந்தித்தார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை இபிஎஸ் அண்மையில் நீக்கினார். இதையடுத்து அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து கோபி தொகுதி எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவர் அளித்தார். இதன்பின்னர் தலைமைச் செயலகத்தில் இருந்த செங்கோட்டையனை திமுக அமைச்சர் சேகர்பாபு சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
தவெகவில் அவர் சேரக்கூடும் எனக் கூறப்பட்ட நிலையில், அமைச்சர் சேகர்பாபு சந்தித்தது, திமுகவில் செங்கோட்டையனை சேர்க்கும் முயற்சியாக பார்க்கப்பட்டது. இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் இருந்து வெளிவந்த செங்கோட்டையனிடம், நீங்கள் சேரப் போகும் கட்சி, திமுகவா, தவெகவா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் கையெடுத்து கும்பிட்டபடி பதிலளிக்காமல் அவர் சென்று விட்டார்.
இருப்பினும், பட்டினபாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்துக்கு நேரில் சென்ற செங்கோட்டையன், அவரை நேரில் சந்தித்தார். அப்போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதனால் தவெகவில் செங்கோட்டையன் இணைவது உறுதியாகி விட்டது. அவருக்கு தவெகவில் துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவிகளில் ஏதேனும் ஒரு பதவி அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.