தவெக சேலம் மாவட்ட செயலாளர் கைது! ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் போலீஸ் அதிரடி!

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தவெக பிரச்சார கூட்டத்தின் பொறுப்பாளரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான வெங்கடேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக கூட்டத்துக்கு நடுவே சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரை, தவெக தொண்டர்கள் சிலர் சரமாரியாக தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், கரூர் நகர போலீசார் தவெகவை சேர்ந்த அடையாளம் தெரியாத 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில், சேலத்தை சேர்ந்த தவெக உறுப்பினரான எஸ்.ஆர்.மணிகண்டன், கரூர் JM-1 நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் சரணடைந்தார்.
தொடர்ந்து, மணிகண்டனுக்கு ஜாமின் கோரி, தவெக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில், கரூர் பிரச்சார கூட்டத்தின் பொறுப்பாளரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான வெங்கடேசன் (40) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை கரூர் ஒருங்கிணைந்த JM-1 நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன்பேரில், வெங்கடேசனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, பிரச்சார கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீசார், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவிற்கு, நீதிமன்றம் 2 நாட்கள் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.