ஆண்களுக்கு எதுக்கு இலவச பஸ்?. சீமான் ஆவேசம்!
அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று, அதன் நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியான கேள்விகளை எழுப்பி, விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை என்று கூறியதோடு, ஏற்கனவே வழங்கப்படும் ஆயிரம் ரூபாயோடு, இன்னொரு ஆயித்தை சேர்த்து வழங்குவதால், தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக மாறும் என்று கூறினார்.
மேலும், மகளிருக்கு இலவசம் என கூறிவிட்டு ஓசி என கூறி அவமானப்படுத்தும் நிலை இருக்கும்போது, ஆண்களுக்கும் இலவசம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெண்களுக்கு ரூ.2000 என்ற அறிவிப்பும் கஜானாவை சுரண்டும் செயல் என ஆவேசமாக சாடியுள்ளார்.