தவெகவில் இணையும் 2 முன்னாள் எம்எல்ஏக்கள்!
புதுச்சேரி பாஜக, அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏக்கள், தமிழக வெற்றிக் கழகத்தில், அக்கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் நாளை (நவ.27) இணைகின்றனர்.
புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக அதிக ஆண்டுகள் இருந்தவர் சாமிநாதன். நியமன எம்எல்ஏவாகவும் இருந்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக புதுச்சேரி பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். அதைத் தொடர்ந்து அண்மையில் பாஜகவில் இருந்து விலகி தனி அமைப்பை உருவாக்கி வரும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு பணிகளை செய்து வந்தார்.
அதேபோல், காரைக்காலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனா, பாஜகவுடன் கூட்டணி மீண்டும் வைத்ததால் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, வெளியேறினார். இந்நிலையில், அண்மையில் முன்னாள் எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து புதுச்சேரியில் தனி அணி ஒன்றை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர்.
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பனையூர் சென்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை இந்தத் தரப்பினர் சந்தித்தனர். இதன் தொடர்ச்சியாக, நாளை (நவ.27) பனையூர் சென்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைகின்றனர்.
இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏக்கள் சாமிநாதன், அசனா தரப்பில் கேட்டதற்கு, “தவெக தரப்பிலிருந்து பேசினர். முறைப்படி தவெகவில் இணைய பனையூர் வருமாறு அழைத்துள்ளனர். அதன்படி நாளை தவெகவில் இணைகிறோம். மேலும் பல முக்கிய பிரமுகர்களும் தவெகவில் இணைய இருக்கின்றனர்” என்றனர்.