'புதிதாக கிளம்பியுள்ள கும்பலுக்கு அறிவு என்றால் அலர்ஜி' - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

'புதிதாக கிளம்பியுள்ள கும்பலுக்கு அறிவு என்றால் அலர்ஜி' - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

 'அறிவு இருப்பவர்கள் அறிவுத்திருவிழா நடத்துவார்கள்' என தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக இளைஞரணி முன்னெடுப்பில் நடைபெற்ற 'அறிவுத் திருவிழா' இன்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் மாற்று ஊடக மையம் கலைக்குழு சார்பாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''முற்போக்கு புத்தக கண்காட்சி இல்லாமல் அறிவுத் திருவிழா முழுமை அடைந்திருக்காது. அது இளைஞரணியால மட்டும்தான் சாத்தியம். இளைஞர்கள் அணி சார்பாக நடந்த புத்தகக் காட்சியில் முழுக்க முழுக்க அரசியல் புத்தகங்கள் தான் இருக்கின்றன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புத்தக காட்சியை பார்வையிட்டுள்ளனர். 35 லட்சத்திற்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.

இந்த நிகழ்விற்கு வள்ளுவர் கோட்டத்தை தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் உள்ளன. 1976 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை வள்ளுவர் கோட்டத்தை திறக்க அழைப்பு கொடுக்கவில்லை. மீண்டும் கருணாநிதி முதலமைச்சரான பிறகு அவர் பதவி பிரமாணம் செய்து கொள்ள தேர்ந்தெடுத்த இடம் வள்ளுவர் கோட்டம் தான். சில பேர் வள்ளுவர் கோட்டம் என்றாலே பயப்படுவார்கள். ராசி இல்லாத இடம் என்று கூறுவார்கள், ஆனால் அறிவுத் திருவிழா நடத்துவதற்கும், ராசிக்கும் சம்பந்தமில்லை என்று எண்ணுகிறவன் நான்.

இனிமேல் வருடம் தோறும் வெவ்வேறு மாவட்டங்களில் அறிவுத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற முயற்சி எடுப்போம். தமிழ்நாட்டில் இளைஞர்களை அரசியல் படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முற்போக்கு புத்தகக் காட்சி அமைக்கப்பட்டது. விமர்சனம் செய்கின்ற நபர்களின் கருத்துக்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலை தேடி நாம் செல்ல வேண்டும். அதற்கு படிக்க வேண்டும். வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும். விமர்சனத்திற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும், அதற்காகத்தான் நாம் இவ்வளவு வேலை செய்து வருகிறோம்.

சில தலைவர்கள் அவர்களின் தொண்டர்கள் அறிவாளிகளாக இருப்பதை விரும்பவில்லை. தொண்டர்களுக்கு அறிவு வந்துவிட்டால் எவ்வாறு நாம் அரசியல் செய்ய வேண்டும்? என்று எண்ணுகிறார்கள். உதாரணமாக, அதிமுகவிற்கு அண்ணாவின் கொள்கைகள் பற்றி தெரியாது. திமுகவை விமர்சிக்க வேண்டும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் எண்ணம்.

பாஜகவோடு கூட்டணி இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார், இதனை பொதுமக்கள் கேள்வி கேட்பார்கள் தானே? எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறினார், ஆனால் திரும்பவும் அடிமையாக கூட்டணி சேர்ந்து விட்டார். கொள்கை பற்றி தொண்டர்களுக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கே தெரியவில்லை, அவருக்கு தெரிந்தது சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் மட்டும்தான். அந்தப் புத்தகத்தை நான் தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை.

அதிமுகவை போல சில கும்பல்கள் புதிதாக கிளம்பி இருக்கின்றன. அறிவுத் திருவிழா குறித்து நான்கு நாட்களுக்கு பிறகுதான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. எப்படி நீங்கள் நடத்தலாம்? யாரைக் கேட்டு நடத்தலாம் என கேட்கிறார்கள். அறிவு இருப்பவர்கள் அறிவு திருவிழா நடத்துவார்கள். எப்படி போலீசை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமா, அதுபோல அறிவு என்றால் அவர்களுக்கு அலர்ஜி.

எஸ்ஐஆர் பணிகளில் நாம் கவனமாக செயல்பட வேண்டும். அடுத்த நான்கு மாதங்களுக்கு வேறு எந்த பணியும் நம் கண்களுக்கு தெரியக் கூடாது. ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கவும், முதலமைச்சராக 2வது முறை மு.க.ஸ்டாலின் நாற்காலியில் அமரவும் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் கடினமாக உழைக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.