யாருடன் கூட்டணி? ஓ.பன்னீர்செல்வம் 'தடாலடி' அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக நிச்சயம் வெற்றி பெற முடியாது எனவும், யாருடன் கூட்டணி என்பதை இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஏழை எளிய மக்களுக்காகவும், அடித்தட்டு நிலையில் இருக்கிற தொண்டர்களுக்காகவும் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை எம்ஜிஆர் உருவாக்கினார். யாராலும் வெல்ல முடியாத வகையில் இந்த இயக்கத்தை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் வலுப்படுத்தினர்.
தமிழகத்தில் எம்ஜிஆர் மூன்று முறை ஆட்சியமைத்து யாராலும் அசைக்க முடியாத முதலமைச்சராக பல நல்ல திட்டங்களை மக்களுக்கு அளித்தார். அதே போல், ஜெயலலிதாவும் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டுகாலம் பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக வளர்த்தார்.
எம்ஜிஆர் உருவாக்கிய சட்டவிதிகளின்படி தான் அதிமுக 50 ஆண்டுகாலமாக வெற்றிநடை போட்டது. ஆனால் தற்போது அதில் சில திருத்தங்களை செய்து கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றோம். அங்கு உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு தெரிவித்தனர். நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நியாயத்தை வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக நிச்சயம் திமுகவை வெல்ல முடியாது. அவர் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் அனைத்தும் இணைய வேண்டும். சர்வாதிகாரப் போக்கில் பிரிந்து சென்றவர்களை சேர்க்க மாட்டேன் மாட்டேன் என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது” என்றார்.
அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவீர்களா? என்று கேட்டதற்கு, “இதுவரை 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிற பிரதமர் கூட்டத்திற்கான அழைப்பு இன்னும் வரவில்லை. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் சில தினங்களில் அறிவிப்பேன்” என்றார்.
அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பாஜக இன்னும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “புத்திமதி சொன்னால் கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டும். இல்லையென்றால் நான் என்ன செய்வது?” என பதில் அளித்தார்.