கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கல்

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கல்

கரூரில் தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர் வங்​கிக் கணக்​கு​களில் தவெக சார்​பில் நேற்று தலா ரூ.20 லட்​சம் வரவு வைக்​கப்​பட்​டது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதன்​பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. கடந்த 5-ம் தேதி கரூர் வந்த இக்​குழு​வினர், பல்​வேறு தரப்​பினரிடம் விசா​ரணை நடத்​தினர். இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கடந்த 13-ம் தேதி உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்​து,ஐபிஎஸ் அதி​காரி பிர​வீண்​கு​மார் தலை​மையி​லான சிபிஐ அதி​காரி​கள் கடந்த 16-ம் தேதி இரவு கரூர் வந்​தனர். அவர்​கள் கரூர் பொதுப்​பணித் துறை சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி, விசா​ரணையை தொடங்​கினர்.

இதனிடையே, இந்த சம்​பவத்​தில் உயரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தமிழக அரசு சார்​பில் தலா ரூ.10 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​பட்​டது. மேலும், காங்​கிரஸ் சார்​பில் தலா ரூ.2.50 லட்​சம், மநீம சார்​பில் தலா ரூ.1 லட்​சம், விசிக சார்​பில் ரூ.50 ஆயிரம் என பல்​வேறு கட்​சிகள் சார்​பில் நிவாரண உதவி​கள் வழங்​கப்​பட்​டன. இதே​போல, தவெக சார்​பில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.20 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை தவெக தலை​வர் விஜய் நேரில் சந்​தித்து ஆறு​தல் கூறி, நிவாரண உதவியை வழங்​கு​வார் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. இதற்​காக, கரூரில் உள்ள ஒரு திருமண மண்​டபத்​துக்கு பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை வரவழைத்​து, அங்கு அவர்​களுக்கு விஜய் நிவாரண உதவி​கள் வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. ஆனால், இடம் தேர்வு செய்​வ​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக விஜய் வருகை தள்​ளிப்​போவ​தாக கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில், கரூர் மாவட்​டத்​தில் 27 குடும்​பங்​களைச் சேர்ந்த 31 பேர் உயி​ரிழந்த நிலையில், 27 பேரின் வங்​கிக் கணக்​கு​களி​லும் நேற்று தவெக சார்​பில் தலா ரூ.20 லட்​சம் வரவு வைக்​கப்​பட்​டது. அதற்​கான குறுஞ்​செய்தி அவர்​களது செல்​போனுக்கு வந்​தது. இதே​போல, இங்கு உயி​ரிழந்த மேலும் 10 பேரின் குடும்​பத்​தினருக்​கும் தவெக சார்​பில் நிவாரணம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், ஒரு குடும்​பத்​தில் ஒன்​றுக்கு மேற்​பட்​ட​வர்​கள் உயி​ரிழந்​திருந்​தா​லும், அந்​தக் குடும்​பத்​துக்கு ரூ.20 லட்​சம் மட்​டும் நிவாரணம் வழங்​கப்​பட்​ட​தாக​வும் தவெக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதுதொடர்​பாக கரூரில் தனது 2 மகள்​களை பறி​கொடுத்த செல்​வ​ராணி கூறும்போது, “தவெக​வினர் வங்​கிக் கணக்குவிவரங்​களை வாங்​கி​யிருந்த நிலை​யில் வங்கிக் கணக்​கில் ரூ.20 லட்​சம் வரவு வைக்​கப்​பட்​டதற்​கான எஸ்​எம்​எஸ் வந்​தது” என்​றார்.

அனுமதி கிடைத்ததும் சந்திப்பேன்: தவெக தலைவர் விஜய் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனை நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்த சூழலில் அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.கடந்த வாரம் காணொலி அழைப்பில் சொன்னதுபோல, நேரடி சந்திப்புக்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்போம். இதற்கிடையே, ஏற்கெனவே அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கி வாயிலாக அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக்கரமாக பாதிக்கப்பட்டவர்கள் ஏற்க வேண்டும். இறைவன் அருளுடன் இந்த கடினமான தருணத்தை கடந்து வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.