முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குழந்தை இல்லை. அவரது சகோதரருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரதுசகோதரர் அண்மையில் இறந்துவிட்டார். சகோதரரின் 8 வயது மகனை தத்தெடுக்க அவர் விருப்பம் தெரிவித்தார். மகனை தத்துக்கொடுக்க சகோதரரின் மனைவியும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, தத்தெடுப்பு பத்திரத்தை பதிவதற்காக மேலூர் கிழக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் அவர் விண்ணப்பித்தார். முஸ்லிம் மதம் தத்தெடுப்பை அனுமதிக்கவில்லை என்று கூறி, அவரது விண்ணப்பத்தை சார் பதிவாளர் நிராகரித்தார். அதை ரத்து செய்து, தனது தத்தெடுப்பு பத்திரத்தை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காவிட்டாலும், அந்த மதத்தினர் சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம். இந்த வழக்கில் குழந்தையை தத்து கொடுப்பவரும், தத்து எடுப்பவரும் முஸ்லிம்கள். இவர்கள் குழந்தை தத்தெடுப்புக்கு சிறுவர் நீதி சட்டம் 2015-ல் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தத்தெடுப்பு என்பது அந்த குழந்தையின் உண்மையான பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற வேண்டும். குழந்தையை தத்தெடுப்பவர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டும். மனுதாரரின் தத்தெடுப்பு விண்ணப்பம் அதற்கான போர்ட்டலில் பதிவேற்றப்பட்ட 3 வாரங்களுக்குள், குழந்தை பாதுகாப்பு அலுவலர் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குச் சென்றதும் 3 வாரங்களில் உரிய தீர்வுகாண வேண்டும். மாவட்ட ஆட்சியர் தத்தெடுக்க அனுமதி வழங்குவதே போதுமானது, அதைப் பதிவு செய்யத் தேவையில்லை.
அண்மைக்காலமாக தத்தெடுப்புக்கு அனுமதி வழங்குவதில் நீண்ட தாமதம் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. சமீபத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில், ‘இந்தியா அதன் தத்தெடுப்பு நடைமுறைகளை தளர்த்த வேண்டுமா?’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதப்பட்டிருந்ததை பார்த்தேன். அதில், குழந்தைகள் தத்தெடுப்பில் உள்ள தாமதம் குறித்து விரிவாக கூறப்பட்டிருந்தது. தத்தெடுப்பு ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கை முறைமற்றும் தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, தத்தெடுப்பு நடைமுறைகளை சிறுவர் நீதிச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.