பாஜகவின் கைப்பாவையான விஜய் - திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி' கடும் விமர்சனம்!

சிபிஐ என்பது ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியின் கைப்பாவை என்று கூறிய விஜய் இன்று அவரே கைப்பாவையின் கைப்பாவையாக மாறியிருப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி' விமர்சித்துள்ளது.
கடந்த செம்ப்டர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு விசாரணை குழு நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது வழக்கு சிபிஐ வசம் சென்றிருக்கிறது.
இந்நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய்யை பாஜகவின் கைப்பாவை என குறிப்பிட்டு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் விஜய்யின் கட்சி மற்றும் பரப்புரை குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.
சொன்ன நேரத்திற்கு விஜய் வரவில்லை என்றும், வந்தவர்களை காக்க வைத்து சோறு தண்ணீர் கொடுக்காமல், மூச்சு திணறவைத்து, செத்து விழுபவர்களை பார்த்த பிறகும், மேடையில் பாட்டுப்பாடி, கொடூரமான வில்லனைவிட விஜய் மோசமாக நடந்துகொண்டதாகவும் கூறியிருக்கிறது. குறிப்பாக, தவெக பரப்புரைக்காக கேட்டதைவிடவும் பெரிய இடத்தை கொடுத்ததாக கூறியிருப்பதோடு, மக்கள் மூச்சு முட்டி சாகும்வரை விஜய் பஸ்ஸுக்குள் காத்திருந்ததாக சாடியிருக்கிறது.
மேலும் சம்பவம் நடந்து 16 நாட்களாகியும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியே வராமல் தலைமறைவாகிவிட்டனர். ஆனால் போலீஸ்தான் ஊரைவிட்டு போகச் சொன்னதாகவும் விஜய் கூறுகிறார். இதை ஏன் 3 நாட்கள் கழித்து வெளியிட்ட வீடியோவில் கூறவில்லை? காவல்துறை போகச் சொல்லியிருந்தால் அதையே தவெக பெரிய பிரச்சினை ஆக்கி இருக்காதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளில் நிறைய தில்லுமுல்லுகளும், பிராடுத்தனங்களும் இருப்பதாகவும், அந்த கட்சியையே தமிழக பிராடுகள் கட்சி என்று சொல்லலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. 41 பேர் இறந்ததில் தனது மகனையும் இழந்துவிட்டதாக பன்னீர்செல்வம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அவர் கடந்த 8 வருடங்களாக தனது மகனை பார்க்கக்கூட இல்லை என்கிறார் பன்னீர்செல்வத்தை பிரிந்து வாழும் அவருடைய மனைவி சர்மிளா.
உச்ச நீதிமன்றத்தில் தனது பெயரை பயன்படுத்தி ஏமாற்றி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுகிறார் மனைவி சந்திராவை இழந்த செல்வராஜ். கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது இடைக்கால உத்தரவுதான். இந்த வழக்கே மோசடியானது என்பது உறுதி செய்யப்பட்டதும் முந்தைய உத்தரவு ரத்து செய்யப்படும். ஆனால் அதற்குள் ‘நீதி வெல்லும்’ என விஜய் அவசரப்படுகிறார்.
கடந்த ஜூலை மாதம் திருப்புவனம் அஜித்குமார் இறந்தபோது, ‘எதற்காக சிபிஐ பின்னால் ஒளிகிறீர்கள்? சிபிஐ என்பது ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் கைப்பாவை’ என்று சொன்னார். இன்று அவரே கைப்பாவையின் கைப்பாவையாக ஆகிவிட்டார். தவெகவே அவர்களால் உருவாக்கப்பட்டதுதான்.
பாஜகவை ‘பாசிசம்’ என்றும், பிரதமரை ‘நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்களே’ என விஜய் சொல்லி அழைத்த பின்னரும் பாஜகவுக்கு கோபம் வரவில்லை என்றால், அந்த ஸ்க்ரிப்ட், ‘பாஜக ஸ்க்ரிப்ட்’ என்றுதானே அர்த்தம்? என கேள்வி எழுப்பி இருக்கிறது முரசொலி.
இக்கட்டுரையானது இன்று வெளியாகி பலரின் கவனத்தையும் பெற்றுவரும் நிலையில், கரூர் சம்பவத்தின் சிபிஐ விசாரணை ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.