வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்குரிமை நீக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? வேல்முருகன் கேள்வி!
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தேர்தல் அதிகாரி ஆய்வுக்காக வரும் நேரத்தில், தங்களது சொந்த வீட்டில் இல்லை என்றால், வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கூறியுள்ளார்.
தமிழ் சைவப் பேரவை மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா ஆவடி, கண்ணப்பாளையத்தில் உள்ள அருள் நிறை தமிழ் சைவப்பெருமான் கோயிலில் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் எட்மண்ட் ஜெயந்திரன் தலைமையில் நடந்த விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
விழாவில் ராஜராஜ சோழனுக்கு தமிழ் சைவ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்குள்ள மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் ரெடிமேட் தேன்நிலவு, ஹேப்பி ஸ்ட்ரீட் உள்ளிட்ட பெண்களுக்கு தொந்தரவுகளை கொடுத்த எத்தனையோ நிகழ்ச்சிகளை நான் நிறுத்தியுள்ளேன். அந்த வகையில் பிக்பாஸையும் நிறுத்துவேன்.
எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை பார்த்து திமுக அஞ்சவில்லை. எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மதரீதியாகவும், இனரீதியாகவும் மக்களின் வாக்குரிமையை மிதிக்கும் பாஜக அரசின் சூழ்ச்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து திமுக போராட்டம் நடத்துகிறது. எஸ்.ஐ.ஆர் திருத்தம் என்பது பூர்வீக குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் 14 ஆவணங்களை கேட்க உள்ளனர்.
அந்த ஆவணங்கள் இல்லை என்றால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என்கிறார்கள். உதாரணத்திற்கு வாக்காளர்களின் தந்தையுடைய பிறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். தற்போதைய தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறைகள் இருப்பவர்களுக்கு பிறப்பு சான்றிதழ்களை எம்எல்ஏவாகிய என்னால் கூட எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் சாமானிய மக்கள் எப்படி கொடுக்க முடியும்.
அது மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ளனர். அவர்களுக்கு இங்கு வாக்குரிமை உள்ளது. ஆனால் தேர்தல் அதிகாரி ஆய்வுக்காக வரும் நேரத்தில் அவர்கள் வீடுகளில் இல்லை என்றால், வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல” என்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் எனக் கூறிய வேல்முருகன் பேசுகையில், “பிக்பாஸ் நடத்தும் விஜய் சேதுபதியும், அதில் பங்கேற்றும் நபர்களும் எனக்கு விரோதமானவர்கள் அல்ல. ஆபாசமான மற்றும் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருப்பதால் மட்டுமே அதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறேன்.
இது தொடர்பாக முதலமைச்சரிடம் கோரிக்கையை முன் வைத்துள்ளேன். இதுவரை வந்து பிக்பாஸ் சீசன்களிலேயே தற்போது எடுக்கப்படும் பிக்பாஸ் தான் மிகவும் ஆபாசமாக உள்ளது. கர்நாடகாவில் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளனர். அதுமட்டுமின்றி கேரளா மற்றும் ஆந்திராவில் வழிமுறைகள் கொடுக்கப்பட்டு பின்னரே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போன்று தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும்” என்றார்.