பாமகவில் தீவிரமடையும் மோதல்... எம்எல்ஏ அருள் மீது டிஜிபியிடம் புகார்!
பாமக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தமிழ்நாடு டிஜிபியை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் அருள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ளது. கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை கடந்த சில மாதங்களுக்கு முன் ராமதாஸ் நீக்கினார். இதனையடுத்து அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் தனியாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சேலம் அருகே ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு எதிராக தாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, அன்புமணி தரப்பை சேர்ந்த மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், பொறுப்பு டி.ஜி.பி. வெங்கடராமனை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், "கடந்த 4 ஆம் தேதி வாழப்பாடியில் எங்கள் இயக்கத்தினர் மீது கொடூரமாக தாக்குதல் நடைபெற்றது. இதில் சிலருக்கு மண்டை உடைந்து உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் போராட்டம் நடத்தி சேலம் மேற்கு தொகுதி எம் எல் ஏ அருள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீது 4 புகார்கள் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய வைத்தோம். ஆனால் பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினர் 8 பேர் மீதே காவல் துறை வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
ஆனால் எம்எல்ஏ அருள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரு தரப்பில் புகார் கொடுத்து ஒரு தரப்பினர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நியாமற்றது.
நாங்கள் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்வது எப்படி நியாயம்? வழக்கறிஞர் பாலுவுடன் சென்று டிஜிபியை சந்தித்து நடுநிலையாக செயல்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். இது நடந்து 15 நாட்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிஜிபியை சந்தித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க கூறியதன் அடிப்படையில் 2-வது முறையாக இன்று புகார் அளித்தோம். எங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்ட பின் டிஜிபியை விசாரிக்க சொல்வதாக திசை திருப்பும் வகையில் பதில் அளித்தார் பொறுப்பு டிஜிபி.
அவரது இந்த பதில் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. 15 நாட்கள் கடந்தும் விசாரணை செய்கிறோம் என கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் அழுத்தத்தில் நியாயம் புறக்கணிக்கப்பட்டு அநியாயம் ஜெயித்துள்ளது. காவல் துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதை நிறுத்தி நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுடன் கலந்து பேசி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகும்" என்று சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தெரிவித்தார்.