செல்வாக்கை இழந்த விஜய்.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா? கரூர் விவகாரத்தில் தடுமாறும் தவெக!

கரூரில் தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக-வின் செயல்பாட்டால் விஜய்யின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அரசியல் களத்தில் புதியதாக வந்திருக்கும் விஜய் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு அனைத்தும் விஜய் கரூரில் கால் பதிப்பதற்கு முன்பு வரை இருந்தது.
ஆனால், கரூரில் கடந்த சனிக்கிழமை நடந்த பரப்புரையில் விஜய்யைப் பார்ப்பதற்காக கூடிய கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விஜய்யின் செயல்பாடுகளும், தவெக-வின் செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
உயிரிழப்பு தகவல்கள் வெளிவரத் தொடங்கியபோது விஜய் கரூரில்தான் இருந்தார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்திப்பதற்காகவும் திமுக, அதிமுக ஆகிய கட்சியினர் மாறி, மாறி குவிந்த நிலையில், விஜய் வருவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக அவர் சென்னை திரும்பினார்.
சென்னை வந்தபிறகு எக்ஸ் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்த விஜய், அதன்பிறகு இந்த சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகே வீடியோ வெளியிட்டார். அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார், ராஜ்மோகன் என முக்கிய நிர்வாகிகள் யாருமே பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை.
கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்ட தவெக அலுவலகம் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. காவல்துறை கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு தவெக மாவட்ட கரூர் நிர்வாகிகள் வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து விலகி வருகின்றனர்
அரசியலில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்? என்பதே இதுவரை அரங்கேறி வருகிறது. ஒரு நெருக்கடியான சூழலை திறம்பட கையாள்வதே ஒரு தலைவனுக்கு அழகாக மக்களால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை நேரில் சென்று பார்க்காத விஜய்யும், தவெக-வும் மக்கள் மத்தியில் தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுகிறார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், விஜய்யின் செல்வாக்கு இந்த சம்பவத்தால் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. நெருக்கடியான நேரத்தில் சரியாக விஜய்யை வழிநடத்த தவறிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தவெக-வின் சறுக்கலுக்கு முக்கியமான காரணமாகவே கருதப்படுகிறது. திமுக, அதிமுக - பாஜக ஆகிய இரு தரப்பினரையும் கடுமையாக விஜய் விமர்சித்து வந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எப்படி மக்களை எதிர்கொள்ளப்போகிறார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
ஒரு நெருக்கடியான நேரத்தில் மக்கள் பக்கம் நிற்காத எந்த தலைவரையும், கட்சியையும் மக்கள் நிரந்தரமாக புறக்கணிப்பார்கள் என்பதே கடந்த கால வரலாறாக அமைந்துள்ளது. நெருக்கடியான சூழலில் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர சில கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் விஜய் எந்த பக்கம் சாயப்போகிறார்? விஜய் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர என்ன செய்யப்போகிறார்? இந்த விவகாரத்தில் தான் மிகப்பெரிய அளவில் இழந்துள்ள செல்வாக்கை விஜய் எப்படி மீட்கப்போகிறார்? என்ற பல கேள்வி விஜய் முன்பு எழுந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் விஜய்யின் செயல்பாடுகளைப் பொறுத்தே விஜய்யின் அரசியல் எதிர்காலமும், அரசியல் செல்வாக்கும் அமையப்போகிறது என்பதே உண்மை ஆகும்.