திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சொத்து உரிமை சார்ந்தது என்பதால் உரிமையியல் வழக்கு மூலமே தீர்வு காண முடியும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது. இதேபோன்று தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மேல்முறையீட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அதன்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று காலை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில், பிற்பகலிலும் விசாரிக்கப்பட்டது.
அரசு தரப்பில், “தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் முடிவே தொடர வேண்டும். உத்தரவு பிறப்பித்த மூன்று நாட்களில் எவ்வாறு நிறைவேற்ற முடியும். மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில்தான் தீபம் ஏற்றுவதற்கு நிவாரணம் பெற முடியும். நீதிபதிகள், உச்சிப்பிள்ளையார் கோயில் தூணில், தீபம் ஏற்றினால் எல்லாரும் பார்க்க முடியும் என்பது சரியா? தீபம் விவகாரத்தில் தேவையில்லாத ஈகோ உருவாகிறது” என வாதம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் நிர்வாக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல” எனத் தெரிவித்தபோது, “அவை திருப்பரங்குன்றம் மலை தொடர்புடையதுதானே?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து கோயில் தரப்பு வழக்கறிஞர், “கோயில் நிர்வாகத்தில் நீதித்துறை தலையிட முடியாது. திருப்பரங்குன்றத்தில் எந்த மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி குறிப்பிடவில்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல. கிரானைட் கல் தூண்தான். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், உண்மையிலேயே மலை உச்சியில் இல்லை. அந்தத் தூணில் விளக்கு ஏற்றினால் யாராலும் பார்க்க முடியாது. தனி நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவில்லை. 175 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை” எனத் தொடர்ந்து வாதங்களை முன்வைத்து வரப்படுகிறது.