சர்வதேச டி20 கிரிக்கெட்டில்ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சாம் கரண்; இங்கிலாந்து த்ரில் வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியானது நேற்று பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை இடையூறு காரணமாக இப்போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்து அடித்தளம் அமைத்து கொடுத்தார். அதேசமயம் ஜோஸ் பட்லர், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தெல் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் கேப்டன் ஹாரி ப்ரூக் மற்றும் சாம் கரண் ஜோடி சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து தரப்பில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்திய சாம் கரண் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை வீசிய சாம் கரண், அந்த ஓவரின் 4ஆவது பந்தில் தசுன் ஷனகாவின் விக்கெட்டை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து 5ஆவது மற்றும் கடைசி பந்தில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் மதீஷா பதிரானா அகியோரது விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் சாம் கரண் பெற்றுள்ளார். இதற்கு முன், கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.