ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்! அதிகாலையில் பரபரப்பான சென்னை மாநகரம்!

சென்னையில் ஒரே நாளில் ஆளுநர் மாளிகை, காங்கிரஸ் தலைமை அலுவலகம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக விமான நிலையம், ஆளுநர் மாளிகை, திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வீடு, தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டை ஜிபி ரோட்டில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், புரசைவாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சத்தியமூர்த்தி பவன் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததை அடுத்து போலீஸார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, இரவு சுமார் 8 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகம், கோடம்பாக்கத்தில் தனியார் செய்தி நிறுவனம், சூளைமேடு பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மணி வீடு, மற்றும் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் என 5க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மட்டும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதே போல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சித் தலைமை அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்தனர். சுமார் இரண்டு மணி நேரம் சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலியான வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரி என்ன? என்பது குறித்து சைபர் போலீசாருடன் சேர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.