சென்னை விமான நிலையத்தில் ரூ.1.01கோடி கஞ்சா பறிமுதல்; வடமாநில இளம்பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.01கோடி கஞ்சா பறிமுதல்; வடமாநில இளம்பெண் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண்ணை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1.01கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் உயர்ரக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய ஏர் இன்டலிஜென்ட் அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காங்கில் இருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் வந்திருந்த இந்தியாவின் வடமாநிலத்தை சேர்ந்த 30 வயதான பெண் பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரித்தபோது சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று வந்திருப்பது தெரியவந்தது.

மேலும் அவர் சுங்கத்துறை அதிகாரியின் விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுவதும் சோதனை செய்தபோது எந்த பொருளும் சிக்கவில்லை. எனவே அந்த இளம் பெண்ணின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவரது உடமைகளில் ரகசிய அறையில் சில பார்சல்கள் இருந்துள்ளது. அதனை பிரித்துப் பார்த்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சல்களை எடுத்து பிரித்து பார்த்தபோது 3 பார்சலில் கஞ்சா மறைத்து கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

பின்னர் பயணியின் உடைமைகளிலிருந்து சுமார் 2.910 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் 1.01 கோடிக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வடமாநில பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவர், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு குருவியாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.