ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் புலி தாக்கி உயிரிழப்பு; நீலகிரியில் சோகம்
புலி தாக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 60 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி 65 சதவீதம் வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த விலங்குகள் அவ்வப்போது வனத்திலிருந்து வெளியேறும்போது, மனித-மிருக மோதல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர் நிகழ்வாக உள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே முதுமலை புலிகள் காப்பகத்தின் வன எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாவனல்லா கிராமத்தை சேர்ந்தவர் நாகியம்மாள்(60). பழங்குடியின பெண்ணான இவர் வழக்கம்போல் தனது வளர்ப்பு கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, புதருக்குள் மறைந்திருந்த புலி ஆக்ரோஷமாக பாய்ந்து நாகியம்மாளை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால், ஆட்கள் வருவதற்குள் கழுத்து மற்றும் கைகளில் புலி தாக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பிறகு நாகியம்மாளின் உடலை புலி புதருக்குள் இழுத்து சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் போலீசார், நாகியம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தாக்குதல் ஏற்படுத்திய புலியை அடையாளம் காணும் நோக்கில், முதுமலைப் பகுதியில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கேமராக்களின் பதிவுகளை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். புலியின் பாதச் சுவடுகள், உடலை இழுத்துச் சென்ற தடங்கள், புலியின் இயக்கம் என அனைத்தையும் வனத்துறை டிராக்கிங் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.