சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஷாய் ஹோப்!

சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஷாய் ஹோப்!

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ஷாய் ஹோப் படைத்துள்ளார்.

நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நேப்பியரில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் தாமதமானதால், 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கேப்டன் ஷாய் ஹோப்பின் அபாரமான சதத்தின் காரணமாக 247 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஹோப் 109 ரன்களை எடுத்திருந்தார்.

பின்னர் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 90 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 56 ரன்களையும், டாம் லேதம் 39 ரன்களையும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். மூலம் நியூசிலாந்து அணி 33.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியையும் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணிக்காக சதம் விளாசிய ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதை வென்றர். இந்த நிலையில் இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.

அந்தவகையில் நேற்றைய தினம் ஷாய் ஹோப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸுக்காக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவை (19 சதங்கள்) அவர் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் 25 சதங்களுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

இதுதவிர, சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ஷாய் ஹோப் படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் ராகுல் டிராவிட், அவரது காலகட்டத்தில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். ஆனால் டிராவிட் விளையாடிய காலகட்டத்தில் 10 அணிகள் மட்டுமே டெஸ்ட் அந்தஸ்த்தை பெற்றிருந்த நிலையில், அவர் 9 அணிகளுக்கு எதிராக சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.

ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டிற்கு பிறகு அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் டெஸ்ட் அந்தஸ்த்தை பெற்றதை அடுத்து, அப்பட்டியலானது 12 அணிகளாக மாறியது. இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப், மற்ற 11 டெஸ்ட் அணிகளுக்கு எதிராகவும் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி புதிய சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதலை தேடுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.