இடியாப்பம் விற்பனைக்கு சிக்கல்? லைசென்ஸ் அவசியம் என உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு
இடியாப்பம் விற்பவர்களும் இனி உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் இடியாப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுகின்றனர். மேலும், காய்ச்சல் போன்ற உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இடியாப்பதை உண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் இடியாப்பம் விற்பனையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த சூழலில், சில இடங்களில் தரமற்ற இடியாப்பம் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
அதன் அடிப்படையில், இனி இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத்துறை உரிமத்தை பதிவு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள், முறையாக உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதலின்படி இடியாப்பம் தயாரித்து அதனை விற்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை உணவு பாதுகாப்புத்துறை உரிமம் புதுப்பிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், இடியாப்பம் தயாரிக்கும் போது பாதுகாப்பாகவும், தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
காய்ச்சல், நோய் தொற்று பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இடியாப்பம் விற்பனையில் ஈடுபட வேண்டாம் எனவும் உணவு பாதுகாப்புதுறை கேட்டுக்கொண்டுள்ளது.