விஜயகாந்தின் உதவியை என்றும் மறக்க மாட்டேன்... சரத்குமார் உருக்கம்

விஜயகாந்தின் உதவியை என்றும் மறக்க மாட்டேன்... சரத்குமார் உருக்கம்

திரைத்துறையில் விஜயகாந்த் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன் என்று சரத்குமார் உருக்கமாக பேசியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் படக்குழுவினர் சரத்குமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது சரத்குமார் பேசுகையில், ''இது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்ச்சி. என் கலைப்பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் உயிர் கொடுத்தவர் விஜயகாந்த். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் படத்தின் போதும் அடிபட்டு 6 மாதம் காலம் படுத்த படுக்கையாக இருந்தேன். விஜயகாந்த் நினைத்திருந்தால் என்னை தூக்கி விட்டு வேறு ஒரு நடிகரை வைத்து பன்னிருக்கலாம், ஆனால் 6 மாத காலம் ஆனாலும் சரத் சரியாகி வரட்டும் என்று கூறினார்.

எந்த ஒரு நடிகரும் இப்படி செய்யமாட்டார்கள். சண்முக பாண்டியன் பெரிய நடிகராக வருவார். இப்படத்தில் இருவரும் உண்மையான மாமா, மச்சான் போல வாழ்ந்துள்ளோம். சண்முக பாண்டியன் மகன், பேர குழந்தைகள் என யார் நடிக்க வந்தாலும் நானே அவர்களோடு நடிக்கிறேன். இந்த உறவு என்றும் நீர்த்துப்போக கூடாது.'' என பேசினார்.