ஜனநாயகன் ரிலீஸ் தேதி குறிச்சாச்சா?.. எல்லாமே ரெடி ஆகிடுச்சாம்.. விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்துக்கு எழுந்த சென்சார் பிரச்னை காரணமாக ஜனவரி ஒனப்தாம் தேதி ரிலீஸாகிவிருந்த படம் தள்ளிப்போய்விட்டது. இந்த விவகாரம் இப்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அவை விஜய் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படம்தான் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இனிமேல் அவரை திரையில் காண்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் இப்படத்தை பண்டிகையாய் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் முழுவீச்சில் தயாராகிவந்தார்கள். ஜனவரி ஒன்பதாம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படக்குழு அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்துகொண்டிருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் ரூபத்தில் இம்முறை பிரச்னை வெடித்தது.
நீதிமன்றம் சென்ற கேவிஎன்: இதனால் கொதிப்படைந்த கேவிஎன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகாது எனவும் அறிவித்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதியோ, 'யு/ஏ சான்றிதழ் உடனடியாக படத்துக்கு வழங்க வேண்டும். மறு ஆய்வுக்கு செல்லும் உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது' என தீர்ப்பு வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தணிக்கை குழு மேல்முறையீட்டுக்கு சென்றது.
தொடர்ந்து சிக்கல்: மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றமோ தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார். இதனால் ஜனநாயகன் படத்துக்கு சிக்கல் தீர்ந்தபாடில்லை. இப்போது இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறது கேவிஎன் நிறுவனம். அந்த வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் தேதி விசாரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
என்ன தகவல்?: அதாவது இந்த மேல்முறையீட்டை ஜனவரி 19ஆம் தேதியே விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துவிட்டதாகவும்; அனைத்து பிரச்னைகளும் முடித்து வைக்கப்பட்டு ஜனவரி 23 அல்லது ஜனவரி 30ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். நடக்கப்போகும் விசாரணையில் அத்தனையும் சாதகமாகவே அமையும் எனவும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.