அமரன் வெளியாகி ஒரு வருடம் ஆச்சு... ஆச்சரியப்பட்ட சிவகார்த்திகேயன்!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா Rajkamal Films International and Turmeric Media) தயாரிப்பில் உருவாகி வெகுவாக பாராட்டப்பட்ட படம் ‘அமரன்’ (Amaran). ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், முகுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திக்கேயன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் வசூல் வேட்டையில் சாதனை படைத்தது.
இந்த நிலையில், அமரன் படத்திற்கு முதன் முறையாக சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI - International Film Festival of India), இந்தியன் பனோரமா (Indian Panorama) பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டது. அதேபோல், சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு (Golden Peacock Award) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிரிவில் இடம்பெறும் சில இந்திய திரைப்படங்களில் ஒன்றாக அமரன் திரைப்படம் உள்ளது.
IFFI 2025-இல் ‘அமரன்' திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர், கோவா பனாஜியில் நடைபெற்ற 56 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். இதில், அமரன் திரைப்படம் இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக திரையிடப்பட்டது.
திரைப்பட விழாவை முடித்து விட்டு நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சென்னைக்கு திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் நடித்த படம் சர்வதேச அளவில் திரையிடப்படுவது பெருமையாக உள்ளது. இது ஒரு நல்ல அனுபவம். நம்ம ஊருல நடக்குற சர்வதேச திரைப்பட விழாவில் நம்ம படம் திரையிடப்பட்டது மகிழ்ச்சி. அமரன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், படம் இன்று வெளியான உணர்வு எனக்கு உள்ளது” என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.