கரூர் சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்!

திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு, நடிகர்கள் உதயா, சௌந்தரராஜன், பூவையார், சாய் தீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலில் இயக்குநர் பேரரசு பேசினார். அப்போது அவர், “சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட ‘காக்கா முட்டை’ திரைப்படமானது தங்கமுட்டையாக மாறியது. அடுத்து வெளியான ‘பசங்க’ படமும் வெற்றியடைந்தது. அதே போல சிறுவர்கள் நடித்திருக்கக் கூடிய ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ திரைப்படமும் வெற்றிப்படமாக அமைய வேண்டும்.
இந்த படத்தில், ‘பிணக்கூராய்வு செய்தால் கூட தெரியாதபடி கொலை செய்ய வேண்டும்’ என ஒரு வசனம் இருக்கிறது. இதுபோன்ற காட்சிகள் அமைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதைப் பார்த்து கூட குற்றங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மத நல்லிணக்கம் உள்ள இடமே சினிமா தான்.
உதாரணத்திற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, கமல்ஹாசன் நாத்திகவாதி. ஆனால், இவர்களுடைய திரைப்படங்களை அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் பார்ப்பார்கள். சினிமாவுக்கு மதம் கிடையாது. மதத்தை வைத்து பயனடைகிறவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே. அந்த வகையில் இந்த திரைப்படம் வெற்றிப்படமாக மாற வேண்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் மேடையில் பேசினார். அப்போது அவர், “படத்தில் நடித்திருக்கக்கூடிய சௌந்தர்ராஜன் தவெக கட்சிக்காக அதிகளவு உழைத்து வருகிறார். நான் அவரிடம் எதற்காக இப்படி உழைக்கிறீர்கள்? கட்சியில் உங்களுக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது? என கேள்வி கேட்டு இருக்கிறேன். அதற்கு அவர், ‘எனக்கு பொறுப்பு பற்றி கவலை இல்லை. விஜய் அண்ணனுக்காக தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்’ என்றார்” என சௌந்தர்ராஜன் குறித்து பேசினார்.
நடிகர் கூல் சுரேஷ், “நான் பேச வரும் போதே கீழே இருந்து பலரும் ‘வருங்கால மோடி’ என குரல் எழுப்புகின்றனர். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போது தொடங்கியுள்ள பிக்பாஸில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என ராம், அப்துல்லா, ஆண்டனி ஆகிய 3 சிறுவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்களோ வாட்டர் மெலன் திவாகர் என கூறினார்கள். ஒருவரை திட்டி திட்டியே பெரிய இடத்திற்கு கொண்டு வந்து லட்சங்களில் சம்பாதிக்க வைத்திருக்கின்றனர்” என்று சமூக ஊடக பிரபலம் திவாகர் பற்றி பேசினார்.
அவரைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் பேசினார். அவர், “மனிதருக்கு முதலில் வேண்டியது நம்பிக்கை. இன்று வரையிலும் நான் ஜெயிப்பேன் என்று நினைத்து தான் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இத்திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும். இதில் சிறுவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் வன்முறையை ரசிக்கிறார்கள் என நினைத்து கத்தி, ரத்தம் என படம் எடுக்கின்றனர்.
ஆனால் வன்முறை இல்லாமல் சமூக பிரச்சினைகளை எடுத்துரைக்கும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எடுக்க வேண்டும். சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று கிடையாது. இப்போதுள்ள பள்ளி மாணவர்கள்கூட கத்தியை எடுத்துச் செல்கின்றனர். இந்த நிலைமை மாற நல்ல திரைப்படங்கள் வரவேண்டும்” என்றார்.
விழாவிலிருந்து சென்ற எஸ்.ஏ சந்திரசேகரிடம் கரூர் சம்பவம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து விரைவாக சென்றுவிட்டார்.