சிவாஜி கணேசன் 6 மாதம் பெரியகுளத்தில் இருந்தார் - நினைவுகளை பகிர்ந்த நடிகர் பிரபு

சிவாஜி கணேசன் 6 மாதம் பெரியகுளத்தில் இருந்தார் - நினைவுகளை பகிர்ந்த நடிகர் பிரபு

எனது தந்தை சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ரஹீம் தியேட்டரில் ஆறு மாதங்கள் தங்கியிருந்தார் என நடிகர் பிரபு தனது தந்தையின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் பிரபு தந்தை சிவாஜி கணேசன் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “எனது தந்தை சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ திரைப்படம் நடிப்பதற்கு முன்பாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ரஹீம் தியேட்டரில் ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். அவருடைய நாடகங்கள் அங்கு நடத்தப்பட்டன. அப்போது, பெரியகுளம், தேனி மக்கள் அவரை பிரியமாக கவனித்துக் கொண்டனர்.

எனது தந்தை மீது நீங்கள் கொண்ட அன்பின் காரணமாக தான் இன்று அனைவரும் இங்கு வருகை தந்துள்ளனர். எனது தந்தை மீது நீங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு, இன்று என்னையும், எனது மகன் விக்ரம் பிரபுவையும் இந்த மேடையில் நிற்க வைத்துள்ளீர்கள். உங்கள் அனைவரும் நன்றி சொல்ல நான் கடமைபட்டுள்ளேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் பிரிபு, “குழந்தைகள் பெரியவர்கள் முன்னிலையில் மரியாதையாக இருக்க வேண்டும், பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி விட வேண்டும். அப்போது தான் அவர்கள் நன்றாக இருப்பார்கள்” என அறிவுரை வழங்கினார்.