திமுக அரசின் திட்டங்களை காப்பி அடித்த எடப்பாடி - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

திமுக அரசின் திட்டங்களை காப்பி அடித்த எடப்பாடி - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

திமுக அரசின் திட்டங்களை காப்பி பேஸ்ட் அடித்து, தேர்தல் வாக்குறுதியாக தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் உள்ளிட்ட அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், திமுக திட்டத்தின் மீது இபிஎஸ் ஸ்டிக்கர் ஒட்டுவதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பாராட்டியிருக்கிறார். அதிமுக சார்பில் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், அனைவருக்கும் வீடு என திமுக அரசின் திட்டங்களையே வழிமொழிந்திருக்கிறார். அந்த வகையில், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம், நகரப் பேருந்துகளில் விலையில்லாமல் பயணம் செய்யும் மகளிர் விடியல் திட்டம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றுக்கு அதிமுக நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை இந்தத் திட்டங்கள் ஏற்படுத்தியிருப்பதை, உணர்ந்திருப்பதால் தான், இப்போது அந்த திட்டங்களையே காப்பி அடித்து தேர்தல் வாக்குறுதியாக தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்குக் கட்டணமில்லா பயணம், மாதந்தோறும் ரூ.1000 போன்ற வாக்குறுதியைத் தந்து திமுக ஆட்சிக்கு வந்தபோது, கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாக பேசினார் பழனிசாமி. "குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துக் கடத்துவது போல், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றியது" என்றெல்லாம் பேசிய நாக்குதான், இப்போது அதே திட்டங்களையே வாக்குறுதி என உருமாற்றிப் பேசுகிறது.

புதிதாக எதையும் வாக்குறுதியாக தர இயலாத பரிதாப நிலைக்கு போய்விட்ட பழனிசாமி, திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே "காப்பி பேஸ்ட்" வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதை காட்டுகிறது.

மேலும், பழனிசாமி அளித்த வாக்குறுதிகளின் லட்சணம் எப்படி இருக்கும் தெரியுமா? கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ‘வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்குச் சிறப்பு நிதியுதவியாக தலா ரூ.2,000 வழங்கப்படும்’ என 2019 பிப்ரவரி 12-ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், இத்திட்டத்தை, 2019 மார்ச் 4ஆம் தேதி தலைமை செயலகத்தில் வெறும் 32 பேரின் குடும்பங்களுக்கு மட்டும் வழங்கி தொடங்கியும் வைத்தார். இதன்மூலம் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் பணம் வந்து சேரும் என மக்களை ஏமாற்றினார். ஆனால், யாருக்கும் பணம் கொடுக்கவில்லை.

2019-ல் ஒரே ஒரு தவணையாக 2 ஆயிரம் ரூபாயை ஆட்சியில் இருந்த போது தராத பழனிசாமியா, அடுத்து ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயை வழங்குவார்? கேட்கிறவர்களை எல்லாம் கேனையனாக நினைத்துக் கொண்டு கேப்பையில் நெய் வடியுது என கலர் கலராக மத்தாப்பு காட்டுகிறார். ஆட்சியில் இருந்தபோதே ரூ.2 ஆயிரம் தராமல் ஏமாற்றிய பழனிசாமிதான், இப்போது ஆட்சிக்கு வருவதற்காக ஏமாற்றப் பார்க்கிறார்.

2021-ல் திருச்சி சிறுகனூரில் திமுக அறிவித்த "ஸ்டாலினின் 7 வாக்குறுதிகள்" என்ற 10 ஆண்டுகாலத் தொலைநோக்கு திட்டத்திற்கான வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத் தொகை இடம்பெற்றிருந்தது. ஆனால், 24.04.2022 அன்று ஊடகத்திற்குப் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, "கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிட்டு திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்ற முடியாது" என்று கூறினார். நடக்காது என்று பழனிசாமி சொன்னதை நடத்திக் காட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்போது, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2000 ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருப்பது வடிவேல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், “அது வேற வாய்... இது நாற வாய்” என்பது போலத்தான் உள்ளது.

"ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்துப் பயணம்" என்று 2-வது வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தை திமுக ஆட்சி செயல்படுத்திய போது, அதற்கான பேருந்துகளை பாமரர்களும் எளிதாக அறியும் வகையில் பிங்க் வண்ணத்தைப் பூசியது போக்குவரத்துக் கழகம். அப்போது விடியல் பயணத்திட்டப் பேருந்துகளை "லிப்ஸ்டிக் பஸ்கள்" என கிண்டலடித்து, பெண்களைக் கொச்சைப்படுத்திய பழனிசாமியின் உதடுகள்தான், இப்போது பொய் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டிருக்கின்றன.

இந்த திட்டங்களின் வரிசையில்தான் வீடில்லாத ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகளைக் கட்டி வழங்கும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தையும், ‘அம்மா இல்லத் திட்டம்’ என நகலெடுத்திருக்கிறார் பழனிசாமி. அவர் அறிவித்திருப்பதிலேயே மிகப்பெரிய நகைச்சுவை 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவாராம், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கே குழி பறிக்கும் பாஜகவின் புதிய சட்டத்தை ஆதரித்த துரோகி பழனிசாமி, தன்னை ஏமாற்றிக் கொள்ளலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களை ஒருநாளும் ஏமாற்ற முடியாது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனது தோல்வியை உணர்ந்து கொண்ட வெளிப்பாடுதான் பழனிசாமி வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகள். பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் அறிக்கையில்தான் வாக்குறுதிகளை கட்சிகள் தரும். தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், முந்திக்கொண்டு ஏன் பழனிசாமி வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்? திராவிட மாடல் அரசு, மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பும் ரூ.3 ஆயிரம் ரொக்கமும் அடிமட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

“எங்குப் பார்த்தாலும் மக்களிடம் பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றித்தான் பேசிக்கிறாங்க” என நிர்வாகிகள் எல்லாம் பழனிசாமியிடம் புலம்பிய பிறகுதானே, திடீரென இந்த வாக்குறுதிகளை வெளியிடும் யோசனைக்கு பழனிசாமி வந்திருக்கிறார். அதிமுகவிடம் எந்த புதிய யோசனைகளும் இல்லை என்பதையே பழனிசாமியின் வாக்குறுதிகள் காட்டுகின்றன. மக்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லாமல், திமுகவின் திட்டங்களையே காப்பியடிக்கும் கையறு நிலைக்கு சென்றுவிட்ட பழனிசாமியின் இந்த பம்மாத்து நாடகத்தை மக்கள் யாரும் நம்பப் போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.