அரசு கல்லூரி பணியாளர்களுக்கு 9 மாதமாக சம்பளம் நிலுவை - உடனே வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கல்லூரி பணியாளர்களுக்கு 9 மாதமாக சம்பளம் நிலுவை - உடனே வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த 41 உறுப்பு கல்லூரிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இந்த கல்லூரிகளில் 2006-ஆம் ஆண்டு முதல் உறுப்புக் கல்லூரி செயல்பட தொடங்கியதில் இருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவாளர், பெருக்குபவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் போன்ற ஆசிரியரல்லா பணியாளர்கள் 231 பேர் தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர்.

இவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றி விடக்கூடாது என்பதற்காகவே அந்தந்த கல்வி ஆண்டில் புதிதாக பணியில் சேர்வதை போல ஒவ்வொரு ஆண்டும் மறு புதுப்பித்தல் அடிப்படையில் பணியாற்ற செய்கிறது பல்கலைக்கழக நிர்வாகங்கள்.

மிகக் குறைந்த சொற்ப அளவிலான ஊதியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இவர்களுக்கு இந்த 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மறு புதுப்பித்தல் கூட செய்யப்படவில்லை. இவர்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும் 9 மாதங்களாக அந்த சொற்ப ஊதியம் கூட வழங்கப்படவில்லை.

மேலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மறு புதிப்பித்தல் செய்யாததும், மாத ஊதியத்தை வழங்காமலும் இருப்பதும் அவர்களின் தகுதி, பணித்திறன் போன்றவற்றை உதாசீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பங்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாழாக்குவது போன்றதாகும்.

கடந்த 23.9.2024 அன்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையின்படி இவர்களின் ஒட்டுமொத்த சம்பளத்திற்காக ஆண்டுக்கு ரூபாய் 3 கோடி தான் செலவழிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு அரசு பத்தாண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் இவர்களின் பணிகளுக்காக கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை கூட செலவழிக்க முடியவில்லை என்பதை ஏற்க இயலாது.